தமிழகத்தில் கொரோனா தொற்று நாள்தோறும் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, நாள்தோறும் பொய்களைச் சொல்லி வருகிறது.
இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதைக் கேட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்ட எம்.எல்.ஏ ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டார். தகுந்த ஆலோசனையின்றி செயல்பட்டதால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் இழந்து விட்டோம்” என்று பேசினார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவிகளும் செய்யாமல், நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட எதிர்க்கட்சியான தி.மு.க-வையும் குற்றம்சாட்டியதால் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர்.
இந்நிலையில், மறைந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் மகன் ராஜா “எங்களைப் பார்த்துக்கொள்ள தி.மு.க தலைவர் இருக்கிறார்; நீங்கள் கொரோனாவை கட்டுப்படுத்தப் பாருங்கள்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோ பதிவில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று, “கொரோனா நிவாரணப் பணிகளால் ஒரு எம்.எல்.ஏ-வை பறிகொடுத்திருக்கிறோம் எனப் பேசியிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்காக, ‘ஒன்றிணைவோம் வா’ எனும் திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது தி.மு.க.
மக்களுக்கு உதவும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டது எனும் வயிற்றெரிச்சலில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அரசால் செய்ய முடியாததை தி.மு.க-வும், தி.மு.க தலைவரும் செய்து வருகின்றனர். அதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இன்று கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள போலிஸார், மருத்துவர்கள், செவிலியர்கள் எனப் பலரும் உயிரிழக்கின்றனர். இவர்களது உயிரிழப்புக்கு அரசுதானே பொறுப்பு. அவர்கள் உயிரிழக்கக் காரணம் என்ன?
எங்களையும், எங்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொள்வதற்கு எங்கள் தலைவர் இருக்கிறார். எதிர்க்கட்சியை குற்றம்சாட்டி பேட்டி தருவதை விட்டுவிட்டு, கொரோனாவிலிருந்து மக்களைக் காக்கும் முயற்சியில் இனியாவது ஈடுபடுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.