இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீட் தேர்வு மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்க வேண்டிய சுமார் 11 ஆயிரம் இடங்கள் பறிக்கப்பட்டிருப்பதாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் ஓ.பி.சி ஊழியர்கள் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாதது குறித்து 15 நாட்களில் விளக்கமளிக்க மத்திய சுகாதாரத்துறைக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், இடஒதுக்கீட்டு கொள்கையை உரிய முறையில் பின்பற்றிட வேண்டும் என மத்திய பா.ஜ.க அரசை வலியுறுத்தியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன்!
பல் மருத்துவம் மற்றும் மருத்துவப்படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இடஒதுக்கீட்டில்- பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 11,000 இடங்களை அவர்கள் இழந்துள்ளனர்.
அரசியல்சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பாதுகாத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.