வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்து ஓமன் நாட்டில் இருந்து ஹாஷினி பிரியா என்ற சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் கொரோனா ஊரடங்கு காலத்தில் தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருவதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நாடு திரும்பவும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் காணொளிக் காட்சி மூலமாக உரையாடி, அவர்களது தேவைகளைக் கேட்டறிந்த தி.மு.க தலைவர், மத்திய மாநில அரசுகளிடம், அவர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளைச் செய்ய வலியுறுத்தினார்.
இந்நிலையில், தி.மு.க தலைவருக்கு ஓமன் நாட்டில் வசிக்கும் சிறுமி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் சிறுமி ஹாஷினி பிரியா கூறியிருப்பதாவது :
“நான் ஹாசினி. ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டிலிருந்து எழுதுகிறேன். எங்களை போன்று வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களின் நலனில் அக்கறையோடு தாங்கள் நலம் விசாரித்ததை கலைஞர் செய்தி தொலைக்காட்சி மூலம் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் அக்கறைக்கு மிக்க நன்றி.
தாங்கள் முதல் குரல் கொடுத்ததால் 13.05.2020 (இன்று) ஒரு விமானம் மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு வருகிறது. அதில் 180 பயணிகள் தாய்நாடு வருகிறார்கள். பெரும்பாலும் கர்ப்பிணி தாய்மார்களும், வயதான தாத்தா பாட்டிகளும், நோய்வாய்பட்டவர்களுமே வருகிறார்கள் என தி.மு.க ஒருங்கிணைப்பாளர் எங்கள் தந்தையிடம் தொலைபேசியில் கூறியதை நான் கேட்டேன்.
மேலும், அவர்கள் பேசும்போது ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக பயணிகள் பதிவு செய்து பயணம் செய்ய இயலாமல் ஏமாற்றத்தோடு காத்திருப்பதாக கவலையோடு பேசிக்கொண்டதை கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
இவர்களில் இன்னும் அதிகமான தாய்மார்களும், தாத்தா பாட்டிகளும், நோயாளிகளும், வேலை இழந்தவர்களும், மாணவர்களும் இருக்கிறார்களாம். எனவே தான் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன். உடனடியாக காத்திருக்கும் அனைத்து பயணிகளையும் தமிழ்நாடு அழைத்து வர ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அன்போடும், தாழ்மையோடும், பாசத்தோடும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை குறிப்பிட்டு, “#VandeBharatMission -ல் தமிழகத்திற்கு எந்த விமானங்களும் திட்டமிடப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவதற்காக விரைவாக தமிழகத்திற்கு விமானங்களை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.