சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சாலையோரத்தில் வசிக்கக்கூடிய 500 நபர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முன்னிலையில் வடசென்னை மாவட்ட செயலாளரும் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏவுமான சேகர்பாபு தலைமையில் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டன.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “தி.மு.க தலைவரின் ஆணைக்கிணங்க ‘ஒன்றிணைவோம் பசியால் வாடுவோருக்கு உணவளிப்போம்’ என்பதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கூட இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம்.
அதன் ஒருபகுதியாக துறைமுகம் பகுதியில் தெருவோரங்களில் வசிக்கக்கூடிய 500 நபர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கி உள்ளோம். சமீபத்தில் உலக அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று தாக்கத்தினால் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்களை விட பசியின் காரணமாக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
பிற நாடுகளைப் போல வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு வழங்கக்கூடிய ஊதியத்தை வழங்குவதைப் போல இந்தியாவிலும் வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாகவே கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட பசியால் அதிக அளவில் உயிரிழப்பவர்களை தவிர்க்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதேபோல, சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி அவதிப்பட்ட 450 குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் தேவையான காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ அன்பழகன் இணைந்து வழங்கினர்.
அப்போது பேசிய கனிமொழி எம்.பி, “எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கொரோா தொற்று அதிவேகமாக பரவுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. முன் அறிவிப்பு இன்றி முழு ஊரடங்கு பிறப்பித்தது காரணத்தினால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க அதிக அளவில் முண்டியடித்து கடைகளுக்கு கூட்டம் கூட்டமாகச் சென்றனர். இதன் மூலம் மக்கள் மீது அரசானது பாரத்தை சுமத்தும் வகையிலேயே செயல்பட்டு வருகிறது என்பதே உண்மை.
அதுமட்டுமின்றி மருத்துவப் பணியாளார்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் தமிழக அரசு முழு கவனத்தை செலுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.