கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தி.மு.க-வினர் களத்தில் இறங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி அளிப்பதோடு நின்று விடாமல், அத்தியாவசியத் தேவைகளின்றி அல்லல்படும் மக்களுக்காக தி.மு.க நிர்வாகிகள் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமலும், அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காமலும் தவித்து வரும் நிலையில், பெரு முயற்சி எடுத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அப்படி, தி.மு.க எம்.பிக்கள் உள்ளிட்ட தி.மு.க-வினர் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக இயங்கி மக்கள் பணி ஆற்றி வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 200 இளைஞர்கள் மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள புசாத் நகரத்தில் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக உணவு மற்றும் மருந்து கிடைக்காமல் அவர்கள் தவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான பாஸ்கர் என்ற இளைஞர், தி.மு.க-வைச் சேர்ந்த தருமபுரி எம்.பி டாக்டர் செந்தில்குமாரை டேக் செய்து, தங்கள் பிரச்னை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தருமபுரி எம்.பி செந்தில்குமார் அதை ரீட்வீட் செய்ததுடன், அந்த மாவட்டத்தின் ஆட்சியரைச் சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
செந்தில்குமாரின் ரீட்வீட்டை பார்த்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், உடனடியாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ராஜீவ் சதவ்வை தொடர்புகொண்டு, தமிழக இளைஞர்களுக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார்.
இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சதவ்வும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த இளைஞர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளனர். இதனால், அந்த இளைஞர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதுகுறித்து, உதவி பெற்ற இளைஞர் பாஸ்கர், “உண்மையிலே நீங்க தான் சூப்பர் ஹீரோ” என்று எம்.பி செந்தில்குமாரை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளார்.