“பேராசிரியரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்திருக்கும் இந்நேரத்தில் நாம் எடுத்திடவேண்டிய உறுதிமொழி : தமிழின உணர்வும், தமிழ் மொழிப் பற்றும், திராவிட இயக்கக் கொள்கையும் கொண்டவர்களாக நாம் தொடர்ந்து உழைத்திட வேண்டும். கலைஞரும், பேராசிரியரும் விட்டுச் சென்ற பணிகளை அவர்களின் வழிநின்று பணியாற்றிட உறுதியெடுப்போம்.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
“திராவிட இயக்கத் தலைவர்களிலேயே நூறாண்டு காணப்போகும் தலைவர் நம் பேராசிரியர் என அவரைச் சந்தித்துத் திரும்பும்போது பேசிக்கொண்டிருப்போம். ஆனால், அவர் நம்மையெல்லாம் மீளாத் துயரிலே ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார்.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
“பேராசிரியரை நான் மகனைப் போல கவனித்துக் கொண்டதாக நண்பர்கள் சொல்கிறார்கள்; சமூக வலைதளங்களிலே எழுதுகிறார்கள். அது தவறு; மகன் ‘போல’ அல்ல; நானும் அவரது மகன்தான்!”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!
“எனக்குத் தொடர்ந்து தோள்கொடுத்த பேராசிரியரின் மறைவு தனிப்பட்ட முறையிலே எனக்கு மிகப்பெரிய இழப்பு.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
“என்றைக்கும் பேராசிரியர் மறையவில்லை; எங்கள் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்; இரத்த நாளங்களில் உறைந்திருக்கிறார் என்கிற உணர்வை ஊட்டுகிற விதத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.”
- ஆசிரியர் கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்
“தளபதிதான் எங்கள் தலைவர்; தளபதிதான் எங்கள் பேராசிரியர்; தளபதிதான் திராவிடத்தின் தூண்; தளபதிதான் வருங்கால வரலாற்றின் பேரொளி”
- துரைமுருகன், தி.மு.க பொருளாளர்
“எங்கள் இதயச் சுமை இன்னும் இறங்கவில்லை. எங்கள் விழிநீர் இன்னும் நிற்கவில்லை. இந்த மாபெரும் இயக்கத்தின் இரட்டைக் கோபுரமாக கலைஞரும், பேராசிரியரும் விளங்கினார்கள். அந்தக் கோபுரங்களை அடுத்தடுத்து காலன் சாய்த்துவிட்டான். நாங்கள் கலங்கி நிற்கிறோம்.”
- துரைமுருகன், தி.மு.க பொருளாளர்
“பேராசிரியர் தமிழ்ச் சமூகத்தின் சுடரொளி. அவரது கருத்துகள் என்றைக்கும் நிலைத்து நீடித்து இருக்கக்கூடியவை. பேராசிரியரின் புகழ் வாழ்க!”
- கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்
“உடலால் உயிரால் நீங்கள் மறைந்திருக்கலாம். பிட்டி தியாகராயரும், நடேசனாரும், டி.எம்.நாயரும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், பேராசிரியரும் திராவிட இயக்கத்தின் அழியாத பொற்சித்திரங்களாகத் திகழ்வார்கள்.”
- வைகோ, ம.தி.மு.க பொதுச் செயலாளர்
“திராவிட இயக்கத்தின் வரலாற்றை ஒப்புநோக்கிப் பார்க்கும்போது, அதன் எல்லா நிலைகளிலும் உறுதியோடு பயணித்த தலைவராக இருக்கிறார் பேராசிரியர். தி.மு.க இடர்களைச் சந்தித்த நேரங்களிலெல்லாம் உற்ற தலைவராகத் தோள் தாங்கியிருக்கிறார் பேராசிரியர்.”
- கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர்
“தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்தினால் தங்களை பலப்படுத்திக் கொள்ளலாம் எனும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் பாசிஸ்டுகள். அவர்களை எதிர்த்துச் சமர் புரிகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.”
- இரா.முத்தரசன், சி.பி.ஐ மாநில செயலாளர்
“தமிழ்நாட்டின் வருங்காலத்துக்கு ஒரு அற்புதமான தலைவரை நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார் பேராசிரியர்.”
- காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிகரமாக விளங்கிய பேராசிரியர் பின்பற்றிய கொள்கைகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.”
- ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி
“தி.மு.க கழகத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும் கொள்கை மாறாமல் கொண்டு சென்ற தலைவர் பேராசிரியர்.”
- பஷீர் அகமது, இந்திய தேசிய லீக் கட்சி
“இலக்கயத்தில் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்குமிடையேயான நட்பைப் போற்றுவார்கள். அரசியலில் கார்ல் மார்க்ஸுக்கும், ஏங்கல்ஸுக்குமான நட்பைப் போற்றுவார்கள். நாம் வாழும் காலத்தில் ஒரு மாண்புகள் மிகுந்த நட்பை நாம் கண்முன்னே கண்டோம்.”
- தொல்.திருமாவளவன், வி.சி.க தலைவர்
“மதவாதமும், சாதியவாதமும் தமிழகத்தைச் சூழ்ந்துவரும் நிலையில், தளபதி மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சவாலை ஏற்கக்கூடிய தலைவராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.”
- தொல்.திருமாவளவன், வி.சி.க தலைவர்
“அண்ணாவுக்குப் பிறகு 50 ஆண்டுகாலம் பிற்போக்கு சக்திகளுக்கு பெரும் சவாலாக விளங்கியவர்கள் கலைஞரும், பேராசிரியரும்.”
- தொல்.திருமாவளவன், வி.சி.க தலைவர்
“மொழிப்பற்றும், இனப்பற்றும், எளிமையும், நட்பும் பேராசிரியரின் அடையாளம். ஒரு கட்சியின் இரண்டாம் நிலை நிர்வாகி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் அவரே அடையாளம்.”
- ஈ.ஆர்.ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
“பொதுவாக, பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்பார்கள். பேராசிரியரின் பேச்சைக் கேட்க ஆயிரம் காதுகள் வேண்டும். பேராசிரியரின் பேரும் புகழும் பல்லாண்டு வாழவேண்டும்.
- பாரிவேந்தர், இந்திய ஜனநாயக கட்சி
“பேராசிரியப் பெருந்தகை அவர்களே, பேரறிஞர் அண்ணா உங்கள் இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருக்கிறார். அன்னைத் தமிழோ உங்கள் இல்லத்தில் எப்போதும் தங்கியிருந்தது.”
- சுப.வீரபாண்டியன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை.
“கலைஞர் தாத்தாவும், பேராசிரியர் தாத்தாவும் செம்மல்கள். இனமானம், தமிழின உணர்வு, தொண்டறம் ஆகியன ஊட்டி வளர்த்து செதுக்கிச் சேர்த்த பொற்சிலை தலைவர் மு.க.ஸ்டாலின்.”
- பேராசிரியரின் பேரன் வெற்றியழகன் உருக்கம்
“உரக்கப் பேசாத பேராசிரியரின் கையசைவுக்கு சட்டமன்றமே பெட்டிப்பாம்பாக அடங்கும். அவரது ஆற்றலுக்கும், அறிவுக்கும், ஆளுமைக்கும் இருந்த மரியாதை அது.”
- தி.வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
“தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அப்பழுக்கற்ற மாமனிதர் பேராசிரியர். பொதுவாழ்வில் தூய்மையாக வாழ்ந்து காட்டிய மாசற்ற தலைவர் அவர்.”
- தி.வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
“கொண்ட கொள்கையிலும், ஏற்ற தலைமையிலும் மாறாமல் பயணித்தவர் இனமான பேராசிரியர். நட்புக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டுமென்றால் தலைவர் கலைஞருக்கும் - பொதுச் செயலாளர் பேராசிரியருக்கும் தான் வழங்கவேண்டும்.”
- பொன்.குமார், தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி
“இரு மாபெரும் தலைவர்களை நாம் இழந்து நின்றாலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலே இயக்கமும், தமிழகமும் சீரோடும், சிறப்போடும் பயணிக்கிறது.”
- பேராயர். எஸ்றா சற்குணம், இந்திய சமூகநீதி இயக்கம்.
“உலகம் தோன்றியது முதல் அழியும் வரை, நட்புக்கு இலக்கணம் கலைஞரும் - பேராசிரியரும் தான். அவர்களது இழப்பு தமிழினம் வாழும் பகுதியெங்கும் ஏற்பட்டுள்ள இழப்பு.”
- கு.செல்லமுத்து, உழவர் உழைப்பாளர் கட்சி
“எல்லாச் சூழலிலும் தி.மு.க-வோடு இணைந்து பயணிக்கிற ஈமான் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சிறுபான்மைச் சமுதாயம். எப்போதும் நாங்கள் தி.மு.க-வையே நம்பியிருக்கிறோம்.”
- திருப்பூர் அல்தாப், தமிழ் மாநில தேசிய லீக்
“தான் பங்கேற்கும் எந்தக் கூட்டமாக இருந்தாலும் இன உணர்வை ஊட்டத் தவறியதே இல்லை இனமான பேராசிரியர்.”
- திருப்பூர் அல்தாப், தமிழ் மாநில தேசிய லீக்
“எந்தச் சூழ்நிலையிலும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு, அழிக்க முடியாத இயக்கம் தி.மு.க என நிறுவிக் காட்டியவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரும் பேராசிரியரும்.”
- பி.வி.கதிரவன், அகில இந்திய பார்வர்டு பிளாக்
“தமிழ் மக்களுக்காக 98 ஆண்டுகள் வாழ்ந்த இனமான பேராசிரியரின் மறைவு என்பது ஈடு செய்ய முடியாதது. கலைஞருக்கு உற்ற நண்பராக இருந்து தமிழ் மக்களிடையே எழுச்சியூட்டும் வகையில் பணியாற்றினார் பேராசிரியர்.”
- பி.என்.அம்மாவாசி, பார்வர்டு பிளாக் (வல்லரசு)
“பல்கலைக்கழகங்கள் தோறும் வளர்க்கப்பட்ட இயக்கம் தி.மு.க. பேராசிரியர் எங்கெல்லாம் பேசுகிறாரோ அங்கெல்லாம் திராவிட இயக்கத்தின் பெருமை குறித்த உரை கேட்டது. சமூக நீதியைக் காக்கிற தன்மைதான் திராவிட இயக்கத்தின் அடித்தளமாக இருக்கிறது. இனமான பேராசிரியர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்”
- அதியமான், ஆதி தமிழர் பேரவை
“திராவிட இயக்கத்தின் ஆரக் கால்களில் ஒன்றாக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு, தமிழர்களின் பகுத்தறிவுப் பல்கலைக்கழகமாக விளங்கியவர் இனமான பேராசிரியர்.”
- இனிகோ இருதயராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்
“கலைஞரின் மனசாட்சியாக இருந்தவர்; நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்; திராவிட இயக்கத்தின் நிறம் மாறாதவர். சோதனைக் காலத்திலும் துணை நின்றவர். கழகம் இருக்கும்வரை பேராசிரியரின் புகழ் இருக்கும்.”
- சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன்
“தி.மு.க-வின் அன்பகமாக பேராசிரியரும், அறிவகமாக கலைஞரும் இருந்தார்கள். அன்பகமும் அறிவகமும் இணைந்தவராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.”
- மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவர் முருகவேல்ராஜன்
“பேரறிஞர் அண்ணா மறைந்தபோது முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய இரங்கற்பாவைப் போல, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் மறைவுக்கும், பேராசிரியரின் மறைவுக்கும் எழுதிய இரங்கற்பா நூறாண்டுகள் கடந்தும் நினைவில் நிற்கும்.”
- மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவர் முருகவேல்ராஜன்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேராசிரியரின் திருவுருவப் படத்தை திறந்து வைக்க இருக்கிறார். தி.மு.க பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.