“நீட் தேர்வை அன்றைக்கும் – இன்றைக்கும் – என்றைக்கும் தி.மு.க எதிர்க்கும்” என சட்டப்பேரவையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (மார்ச் 12, 3030) சட்டப்பேரவையில் உரையாற்ற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
"நீட் பிரச்னை குறித்து பல்வேறு சமயங்களில், பல்வேறு விவாதங்கள் இதே அவையில் நடந்துள்ளது. மீண்டும் இப்போது கிளம்பி இருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசிய காரணத்தால் அதற்கான விளக்கத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
நீட் தேர்வைப் பொறுத்தவரை தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தவரை தமிழ்நாட்டில் நுழையவிடாமல் பார்த்துக் கொண்டோம் என்பது உண்மை. அமைச்சர் சொன்னது போல இருக்கலாம். நான் மறுக்கவில்லை. ஆனால் அந்தந்த மாநிலம் விரும்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சூழ்நிலையில்தான் அது நிறைவேற்றப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி கடைசி வரையில் அதை நாம் எதிர்த்திருக்கிறோம்.
இதே அவையில் பல சமயங்களில் எடுத்துச் சொன்னபோது, எந்த காரணத்தைக் கொண்டும் நீட் தேர்வு வராது, அதைத் தடுக்கிற முயற்சியில்தான் ஈடுபடுவோம் என்று நீங்கள் பலமுறை உறுதி தந்துள்ளீர்கள். தேர்தல் அறிக்கையிலும் உறுதி அளித்துள்ளீர்கள்.
உங்களுடைய கட்சியின் பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள். நீதிமன்றம் வரை சென்ற விவகாரம் எல்லாம் தெரியும். அதைப் பற்றியெல்லாம் பேசவேண்டிய அவசியம் நிச்சயம் ஏற்பட்டுவிடும். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை 'நீட்'டை அன்றைக்கும் எதிர்த்தோம், இன்றைக்கும் எதிர்க்கிறோம், என்றைக்கும் எதிர்ப்போம், எப்போதும் எதிர்ப்போம். உங்கள் நிலை என்ன? அதைத்தான் எங்கள் உறுப்பினர் பொன்முடி அவர்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறாரே தவிர வேறு அல்ல.”
இவ்வாறு பேரவையில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.