கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினரும் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியின் “நமது முயற்சி மக்கள் வளர்ச்சி” செந்தில் பாலாஜி பவுண்டேஷன் என்ற அமைப்பை துவக்கி வைத்து அந்த அமைப்பின் இணையதளத்தையும் தொடங்கிவைத்தார். அந்த அமைப்பின் மூலம், கருர் மாவட்டம் முழுவதும் 67,000 மரக்கன்றுகளை நடும் பணியையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர்.
பின்னர் நடைபெற்ற இளைஞரணி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “செல்லும் இடங்களில் எல்லாம் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொதுவாக, ஆளும் கட்சியில்தான் மற்ற கட்சியினர் இணைவார்கள். ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளுங்கட்சியினர் வந்து எதிர்க்கட்சியில் இணைவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் அடுத்து தி.மு.கதான் ஆட்சியில் அமரவிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மாற்றுக் கட்சியில் இருந்து தி.மு.க-வில் இணைந்த அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ விசாரணை அமைக்கவேண்டும். இதைச் சொன்னால் ஒரு ‘முந்திரிக்கொட்டை’ அமைச்சர் கோபப்படுவார். யாரைக் கேள்வி கேட்டாலும் அவர்தான் பதில் சொல்வார்.
இன்னொரு அமைச்சர் இருக்கிறார். சிறுவனை அழைத்து அவரது செருப்பைக் கழற்றச் சொல்கிறார். அதற்கு குனிய முடியவில்லை எனக் காரணம் சொல்கிறார். அ.தி.மு.ககாரருக்கு குனிய முடியவில்லையாம். அங்கிருக்கும் அனைவருமே குனிந்து குனிந்து பதவிகளைப் பெற்றவர்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.
தமிழ்நாட்டில் இரண்டு அடிமைகள் இருக்கிறார்கள். ஒருவர் தர்மயுத்தம் செய்த அடிமை; இன்னொருவர் தவழ்ந்து தவழ்ந்து சென்ற அடிமை. இந்த இரு அடிமைகளையும் கட்டுப்படுத்த டெல்லியில் மோடி இருக்கிறார்.
டெல்லி மூன்று மாதங்களாக அமைதியாகப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க நிர்வாகியின் வன்முறையைத் தூண்டும் பேச்சைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. வன்முறையில் 50 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். டெல்லியிலேயே இருக்கும் பிரதமர் அவர்களைப் போய்ச் சந்திக்கவில்லை. அடிமை அரசையும், பாசிச அரசையும் அடுத்த முறை வீட்டுக்கு அனுப்புவோம்” எனப் பேசினார்.