தருமபுரி தொகுதி விவசாயிகள் பலன்பெற தோனி மடுவு எனும் இடத்தில் தடுப்பணை கட்டும் பணியைத் துவக்கிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் தி.மு.க எம்.பி டாக்டர்.செந்தில்குமார்.
இதுகுறித்து மக்களவையின் பூஜ்ய நேரத்தில் தருமபுரி எம்.பி., டாக்டர் எஸ்.செந்தில்குமார் பேசுகையில், “தருமபுரி மக்களவைத் தொகுதியிக்குட்பட்ட மேட்டூர் தாலுகாவில் பருகூர் மலை உள்ளது. மழைக்காலங்களில் இங்குள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உற்பத்தியாகி கிளம்பும் தண்ணீர், நேராகச் சென்று பாலாறு நதியில் கலக்கிறது.
அவ்வாறு சென்றடையும்போது, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையோரப் பகுதியான தோனி மடுவு என்ற இடத்தில் பாலாற்றில் கலக்கிறது. இந்த தோனி மடுவு என்ற இடத்தில், ஒரு புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது.
அங்கு தடுப்பணை கட்டப்பட்டால், அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள 11,000 ஏக்கர் அளவுக்கு பரந்துவிரிந்து கிடக்கும் விவசாய பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் கிடைத்து விவசாயிகள் பலனடைவார்கள்.
மேலும், மேட்டூர் சட்டசபைத் தொகுதியைச் சேர்ந்த 105 கிராமங்களின் குடிநீர் பற்றாக்குறை உள்பட அத்தியாவசிய தண்ணீர் தேவைகளையும் அந்த தடுப்பணை பூர்த்தி செய்து விடும்.
இந்த புதிய தடுப்பணையை கட்டுவதற்கு, நிலம் கையகப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு, அப்பகுதியிலேயே போதிய அளவுக்கு 190 ஏக்கர் வனத்துறை நிலப்பரப்பும் 60 ஏக்கர் தனியார் நிலப்பரப்பும் உள்ளது.
எனவே, இந்த நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கான, ஒப்புதலைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம், தமிழக அரசு விரைந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த தடுப்பணை, அப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனளிப்பதால் அதற்கான அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
தோனி மடுவு தடுப்பணை கட்டும் திட்டத்தை, நிறைவேற்றுவதற்கு தேவையான நிதி உதவியையும், மத்திய அரசிடம் உரிய முறையில் தமிழக அரசு கேட்டுப் பெற்றிட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.