தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை ‘தமிழர் எழுச்சி நாளாக’ தமிழகம் முழுவதும் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளைச் செய்து தி.மு.கவினர் கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ நடத்தி வந்த வேலைவாய்ப்பு முகாமல் பயன்பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அ.தி.மு.க டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது.
அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வருகிறது. ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.கவோ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.
ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, 4 கோடிப் பேரின் வேலைவாய்ப்புகளை பறித்துள்ளார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தி மக்களை வாட்டி வதைத்தது போதாதென்று தற்போது சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டங்களை இயற்றி மேலும் இன்னல்களைக் கொடுத்து வருகிறது.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவது உறுதி” எனத் தெரிவித்தார்.