தி.மு.க இளைஞரணி பணிகள், நடத்திய பாசறைக் கூட்டங்கள் குறித்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மடல் வரைந்துள்ளார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அது பின்வருமாறு :
அடுத்த பயணத்துக்காகக் காத்திருக்கிறேன்!
“தி.மு.க இளைஞர் அணி செயலாளராக நான் பொறுப்பேற்று முழுதாக ஏழு மாதங்கள் முடிந்துள்ளன. ‘இரண்டு மாதங்களுக்குள் 30 லட்ச இளைஞர்களை உறுப்பினர்களாக அணியில் சேர்த்தல்’ என்பதே எங்களின் முக்கியமான முதல் பணியாக இருந்தது.
இதற்கிடையே, அணி நிர்வாகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புதல், நீர்நிலைகளைத் தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தல், அண்ணா பிறந்தநாள் கவிதை&கட்டுரைப் போட்டிகளை நடத்துதல், புதிய உறுப்பினர்களுக்கு இயக்கம், மொழிப்போர் குறித்த கழக வரலாற்றைப் பயிற்றுவிக்கும் பாசறைக் கூட்டங்களை மாவட்ட வாரியாக நடத்துதல், கழகத்தின் மீதான அவதூறுகளால் மறைக்கப்படும் வரலாறை விளக்கும் ‘பொய் பெட்டி’ நிகழ்ச்சியை சமூக வலைதள தன்னார்வலர்கள் முன்னிலையில் நடத்துதல், மண்டல அளவிலான ஆய்வுகளை நடத்துதல் என்று பல்வேறு பணிகளின் காரணமாக உறுப்பினர் சேர்க்கை இலக்கை கொஞ்சம் தாமதமாகவே எட்டிப்பிடித்தோம்.
‘இலக்கை அடைந்துவிட்டோம்’ என்று நினைத்திருக்கையில், ‘30 லட்சம் அல்ல, 50 லட்சம்’ என்று தலைவர் அவர்கள் உறுப்பினர் சேர்க்கை இலக்கை உயர்த்த, தற்போது அதைநோக்கி ஓடத்தொடங்கியுள்ளோம்.
நான் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற சமயத்தில், உறுப்பினர் சேர்க்கை குறித்து பேச்சு வரும்போதெல்லாம், ‘உறுப்பினர் சேர்க்கையெல்லாம் சரியாகத்தான் நடக்கும். ஆனால் உறுப்பினர் அட்டைதான் முறையாக வந்து சேராது’ என்று சிலர் புகாராகவே சொன்னார்கள்.
அந்த தாமதமோ, தவறோ இம்முறை நடந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனமுடன் இருந்தோம். அப்படி முதல் தவணையாக அச்சாகி வந்த சுமார் 10 லட்சம் இளைஞர் அணி உறுப்பினர் அட்டைகளைச் சம்பந்தப்பட்ட அமைப்பாளர்கள் மூலம், அந்தந்த மாவட்டங்களில் கொண்டுபோய் சேர்த்தோம்.
அப்படிச் சேர்த்த இளைஞர் அணி உறுப்பினர் அட்டைகளைச் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் வழங்கும் நிகழ்வை என்னை வைத்துத் தொடங்கவேண்டும் என்று பல மாவட்டச் செயலாளர்களும் இளைஞர் அணி அமைப்பாளர்களும் விரும்பினர்.
அந்த சமயத்தில்தான் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் கணேசனும், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் சபா ராஜேந்திரனும் நெய்வேலியில் நடக்கும் ஒரு திருமணத்தை நடத்திவைக்க ஏற்கெனவே தேதி வாங்கியிருந்தது நினைவுக்கு வந்தது.
அந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, இளைஞர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வையும் அதே கடலூர் மாவட்டத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.
நெய்வேலிக்கு கிளம்புவதற்கு முன்புதான் இந்த பயண விவரத்தைக் கடலூரின் கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் செயலாளர்களான அண்ணன்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கணேசன் இருவரிடமும் தயங்கியபடியே சொன்னேன். ‘கடலூர் வாங்கத் தம்பி, கலக்கிடலாம்’ என்று அவர்களும், ஆர்வமாக அழைத்தனர்.
12ம் தேதி மாலை முதல் நிகழ்ச்சியாக நெய்வேலி திருமண வரவேற்பு விழா. மணமக்களின் பெற்றோர் இருவரும் கழகப் பொறுப்பில் இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து பள்ளிக்கூடம் ஒன்றும் நடத்துகிறார்கள். மணமகளின் தாத்தா, அறிஞர் அண்ணா காலத்தில் கழக சீரணிப் படையில் இருந்தவராம்.
இருவீட்டாரின் கழகப் பற்றையும், பெருமைகளையும் எடுத்துக்கூறி, ‘பாசிச பா.ஜ.க & அடிமை அ.தி.மு.க’ போல் இல்லாமல் சுயமரியாதையுடன், சுதந்திரமாக விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்று மணமக்களை வாழ்த்தினேன்.
மறுநாள், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு, வடலூரில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தார் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அணியில் புதிதாகச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் உறுப்பினர் அட்டை பெற அழகாக அணிவகுத்து அமர்ந்திருந்தனர். கழக நிர்வாகிகள், இளைஞர் அணியின் நிர்வாகிகள் அமர அரங்கிற்கு வெளியே இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அங்கேயும் பெருந்திரளான கூட்டம்.
புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து என்னிடம் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ‘இவ்வளவு மிகப்பெரிய, எழுச்சியான நிகழ்வைக் குறுகிய கால இடைவெளியில் எம்.ஆர்.கே அண்ணன் போன்றோரால்தான் நடத்தமுடியும்’ என்று பேசினேன். அவை வெறும் வாய்வார்த்தைகளல்ல. உண்மை. இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துகள்.
அடுத்து அதே மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகள் பலர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணையும் விழா. மேடையில் உள்ளாட்சி பிரதிநிதிகள். எதிரே அவர்களுடன் கழகத்தில் இணையும் மாற்றுக் கட்சியினர் என பெருங்கூட்டம்.
‘மாநிலத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த நீங்கள் அதிலிருந்து விலகி கழகத்தில் இணைகிறீர்கள். கழகத்தின் மீது நீங்கள் வைத்துள்ள இதே நம்பிக்கையைத்தான் மக்களும் கொண்டுள்ளனர். நிச்சயம் நல்லது நடக்கும்’ என்று நான் பேசியதை, அரங்கிலிருந்த அனைவரும் தங்கள் கரவொலி மூலம் ஆமோதித்தனர்.
அதைத்தொடர்ந்து கடலூர் மேற்கு மாவட்டத்தில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி. நெய்வேலி தொ.மு.ச வளாக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் அண்ணன் கணேசனும், சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சபா ராஜேந்திரனும் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஒரு பெரிய கூட்டுக் குடும்ப வீட்டுக்கு வெளியூரிலிருந்து உறவினர் ஒருவர் வந்தால், எப்படி அந்த குடும்பத்தில் ஒருவராகக் கூடிக் கரைந்து விடுவாரோ அப்படி அந்த அரங்கில் நான் கரைந்துபோனதாக உணர்ந்தேன். அப்படி ஓர் எளிமையான அழகான நிகழ்ச்சியாக அதை வடிவமைத்திருந்தார் அண்ணன் கணேசன். உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களுக்கான அட்டையை வழங்கி வாழ்த்திப் பேசினேன். அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.
சென்னை வந்தபிறகு ஒருநாள் இடைவெளியில், இளைஞர் அணியினருக்கான பயிற்சிப் பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ள 15ம் தேதி இரவு தருமபுரி சென்றேன். பாசறை கூட்டம் என்பது நம் கழகத் தலைவரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான நிகழ்வு.
நான் இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பேற்று, ஒவ்வொரு நிகழ்வையும் நடத்தி முடித்தபிறகு தலைவரிடம் சென்று அதன் விவரத்தைத் தெரிவிப்பேன். அப்போது, ‘அடுத்த பாசறை கூட்டம் எங்கு, எப்போது’ என்று கேட்பார். பெரும்பாலான சந்திப்புகளில் இந்த கேள்வி மட்டும் மாறாது.
அதாவது மாதம் ஒரு பாசறை கூட்டம் என்பது தலைவரின் உத்தரவு. இளைஞர் அணி சார்ந்த பல வேலைகள் இருப்பதால், ‘இரண்டு மாதங்களுக்கு ஒன்று’ என்று தலைவரிடம் அனுமதி பெற்றுள்ளோம்.
16ம் தேதி காலை, பாசறையில் கலந்துகொள்ளும்முன், தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினர் சகோதரர் மருத்துவர் செந்தில்குமாரின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்தேன். சகோதரர் செந்தில்குமாரின் செயல்பாடுகள் அதிரடியாகவும் மக்களுக்குப் பெரிதும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளதில் பெருமகிழ்ச்சி. அவர் இளைஞரணியின் துணை அமைப்பாளர்களில் ஒருவர் என்பது எனக்குக் கூடுதல் பெருமை.
அதைத்தொடர்ந்து பாசறை கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்துக்கு வந்தேன். மிகப்பெரும் எழுச்சியுடன் வெண் சீருடையில் இளைஞர்கள் திரண்டிருந்தனர். முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் தங்கம் தென்னரசு, மொழிப்போர் குறித்தும், பேராசிரியர் சுப.வீ அண்ணன் திராவிட இயக்க வரலாறு குறித்தும் உரையாற்ற காத்திருந்தனர்.
இது எனக்கு இரண்டாவது பாசறை கூட்டம். உண்மையாக சொல்வதென்றால், மீண்டும் கல்லூரி புகும் உணர்வே ஓங்கியிருந்தது. ‘உங்களில் ஒருவனாக இருந்து, இரு ஆசிரியர்களின் பாடங்களைக் கேட்டுப் பயன்பெறவே நானும் வந்துள்ளேன்’ என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். அதுதான் உண்மையும்கூட.
‘மொழிப்போர் என்பது சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது’ என்று சங்க இலக்கிய பாடலுடன் தொடங்கிய அண்ணன் தங்கம் தென்னரசு ‘மீண்டும் ஒரு மொழிப்போர் தேவை. ஆனால் இது என்றும் ஓயாத போர்’ என்று பேசி முடித்தார். மனதுக்கு நிறைவான பேச்சு.
சுப.வீ அண்ணன் தன் உரையின் தொடக்கத்திலேயே, ‘'உங்கள் தாத்தா&பாட்டிகளில் பட்டதாரிகள் எத்தனை பேர்? கை உயர்த்துங்கள்' என்றார். ஒரு கை கூட உயரவில்லை. 'அப்பா&அம்மாவில் எத்தனை பேர் பட்டதாரிகள்' என்றதும் ஓரிரு கரங்கள் உயர்ந்தன. 'உங்களில் எத்தனை பேர் பட்டதாரிகள்' என்றதும்தான் தாமதம், கிட்டத்தட்ட 95 சதவிகித கரங்கள் உயர்ந்தன. 'இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி, தி.மு.கவின் வெற்றி' என்றார் சுபவீ. அப்போது எழுந்த கரவொலி அடங்க வெகுநேரம் பிடித்தது.
நிகழ்ச்சியில் ‘மறையாச் சூரியன்’ என்ற தலைப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து நம் தலைவர் ஆற்றிய, ‘அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே’ என்று தொடங்கும் காணொலி உரை, அனைவரையும் உலுக்கி எடுத்தது. அந்த காணொலியைக் கண்ட அனைவரும் அவ்வளவு உணர்ச்சி குவியலாய் காணப்பட்டனர்.
பாசறையின் முடிவில் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும், பத்திரிகையாளர் அண்ணன் கோவி.லெனின் எழுதிய ‘கலைஞரிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?’ புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
மனதுக்கு நிறைவாக அமைந்த இந்த பாசறை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தருமபுரி மாவட்டச் செயலாளர் அண்ணன் தடங்கம் சுப்பிரமணி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கோ.சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு என் அன்பும் நன்றியும்.
அந்நிகழ்வைத் தொடர்ந்து முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கழகத்தின் மூத்த முன்னோடி, முத்தமிழறிஞர் கலைஞரால் ‘ஆர்.சி’ என்று அன்போடு அழைக்கப்படும் ஆர்.சின்னசாமி அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்தேன்.
‘இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வேண்டும்’ என்ற அரசியலமைப்பு சட்டத்தின் 17வது பிரிவு நகலை 17-11&1986ல் நடந்த போராட்டத்தில் எரித்து கைதாகி தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்த 10 பேரில் இவரும் ஒருவர்.
‘ஒரு குறையும் இல்லை. சந்தோஷமாக இருக்கிறேன். கலைஞருடனான நட்பை நினைத்து ஒவ்வொரு நாளும் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். என்னை நினைவுவைத்து இவ்வளவு தூரம் வந்து சந்தித்ததற்கு நன்றி’ என்றார்.
‘மொழிப்போர் தியாகிகளின் நினைவுகளைப் போற்றக் கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் இந்த ஆண்டு நானும் கலந்துகொண்டேன். இது என் முதல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம். அதில் உங்களைப் பற்றிப் பேசினேன்’ என்றதும் மிகவும் மகிழ்ந்தார்.
வாசல் வந்து வரவேற்கும்போது என் கையைப் பற்றிய அய்யா சின்னசாமி அவர்கள், வழியனுப்பும் வரை கையை விடவே இல்லை. அவரின் அந்த அன்பில், திராவிட இயக்கத்தின் நீண்ட வரலாற்றையும் கழக முன்னோடிகளின் தியாகங்களையும் ஒருசேர உணர முடிந்தது.
அடுத்து, சென்னை வரும் வழியில் தருமபுரி பெரியாம்பட்டி கிராமத்தில் இளைஞரணியின் மாவட்ட துணை அமைப்பாளர் மகேஷ்குமாரின் ஏற்பாட்டில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றிவைத்தேன்.
இருவண்ணக் கொடி குறித்து பேரறிஞர் அண்ணாவின், ‘கறுப்பு நிறம் என்பது சமுதாயத்தில் உள்ள இருண்ட நிலையை உணர்த்தும் அடையாளம். சிவப்பு நிறம், இருண்ட நிலையைப் போக்கி ஒளியை உண்டாக்கும் குறியீடு’ என்ற கூற்று அப்போது நினைவில் வந்தது. இப்படிப்பட்ட கழகக் கொடி ஏற்றுவது என்பது பெருமையான தருணம்.
அடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் துவாரகாபுரம் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையை திறந்துவைத்து கழகக் கொடியேற்றிவைத்து உரையாற்றினேன். இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் செங்குட்டுவன் அவர்களுக்கும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரஜினி செல்வத்துக்கும் நன்றி.
12ம் தேதி நெய்வேலியில் தொடங்கி, 16ம் தேதி இரவு சென்னை திரும்பும்வரையிலான இப்பயணத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகளுடன் கழிந்த அந்த தருணங்கள் மனதுக்கு இதமாகவும் இன்னும் உழைக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும் தருவதாக அமைந்தது.
திருச்சி தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், இளைஞர் அணியின் மாநில துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ., தாயகம் கவி எம்.எல்.ஏ., அசன் முகமது ஜின்னா, ஜோயல், பைந்தமிழ் பாரி, துரை ஆகியோருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் கடலூர் டி.வி.ஆர்.எஸ்.ரமேஷுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணன் சுகவனம், அண்ணன் வெற்றிச்செல்வன் ஆகியொருக்கும், அண்ணன் தாமரைச்செல்வனுக்கும், சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் இன்பசேகரன் உள்பட இந்தப் பயணத்தில் பங்கேற்று உதவிய கழக முன்னோடிகள் அனைவருக்கும் நன்றி.
தொடர்ந்து பயணிப்பதுதானே வாழ்க்கை. உடன்பிறப்புகளுடனான அடுத்த பயணத்துக்காக இன்னும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்!"
இவ்வாறு அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.