சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினரின் நெருக்கடியால் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டியும் மாவட்ட ஆட்சியர் சந்திக்க மறுத்ததால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார் தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன், “மகுடாஞ்சாவடி ஒன்றியத்தில் தேர்தல் அலுவலர் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. தி.மு.க வேட்பாளரின் வேட்புமனுவில் எல்லாம் சரியாக இருந்தும் ஆளுங்கட்சியினரின் அழுத்தத்தால் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலரே பகிரங்கமாகச் சொல்கிறார்.
பின்னர், 3000க்கும் மேற்பட்டோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக தி.மு.க வேட்பாளரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து புகார் அளிக்க நேற்று காலை மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேரம் கேட்டோம். நேற்று முழுவதும் காலை முதல் இரவு வரை மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேரம் கோரியும், சந்திக்க மறுத்தார்.
உள்ளாட்சித் தேர்தல் முறைகேடின்றி நடைபெறவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிக்கொண்டு இருக்கிறார். ஆனால், சேலம் மாவட்டத்தில் பல இடங்களிலும் வேட்பு மனு பரிசீலனையில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
தேர்தல் மேற்பார்வையாளராக உள்ள காமராஜ் ஐ.ஏ.எஸ் எங்களை சந்திக்க வரும்படி தெரிவித்தார். ஆனால், நாங்கள் சென்றபோது பத்திரிகையாளர்கள் அங்கு கூடியதால் பத்திரிகையாளர்கள் இருக்கும்போது உங்களைச் சந்திக்க முடியாது எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
மாவட்ட ஆட்சியரையும் சந்திக்க முடியவில்லை. தேர்தல் மேற்பார்வையாளரையும் சந்திக்க முடியவில்லை. இவர்களை நம்பித்தான் சேலம் மாவட்டத்தின் 11 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றன.
நியாயமாக தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லை எனும் நிலையே இங்கு நிலவுகிறது. தேர்தல் முடிவுகளையும், கடும் நெருக்கடிகளுக்கிடையே அவர்கள் எண்ணப்படி அறிவிக்கும் சூழல் உண்டாகும் என எச்சரிக்கிறேன்.
எங்களை சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திக்க மறுத்ததால், அவர் அலுவலகம் வரும்போது சந்தித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்திருக்கிறோம்.
மக்கள் பிரதிநிதிகளையே சந்தித்து முறைகேடுகளைக் கேட்க விரும்பாதவர்கள், பொதுமக்களின் பிரச்னைகளை எப்படி காது கொடுத்துக் கேட்பார்கள் எனும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.