தி.மு.க

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க வழக்கு... இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து வலியுறுத்த திட்டம்!

தி.மு.க சார்பில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க வழக்கு... இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து வலியுறுத்த திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்தநிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தினர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த குடியுரிமை சட்டத்திற்கு தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த டிசம்பர் 13ம் தேதி தி.மு.க இளைஞரணி-மாணவரணி சார்பில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்நிலையில், இன்று தி.மு.க சார்பில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மதரீதியாக நாட்டை பிளவுபடுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அளித்துள்ள மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி பாப்டே அமர்வு முன்பாக நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குடியரசு தலைவரை இன்று மாலை சந்திக்க உள்ளனர்.

banner

Related Stories

Related Stories