நூலகரும், சமூக சேவகருமாள ‘பாலம்’ கல்யாணசுந்தரம், பாலம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் நூலக அறிவியலில் தங்கப் பதக்கம் பெற்றவர். இவர் தனது 35-ஆண்டு கால நூலகப் பணியில் தான் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்து உள்ளார். ஏழைகளுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்.
பாலம் கல்யாணசுந்தரத்தின் ‘முத்து விழாவுக்கு’, திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 28ம் தேதி வாழ்த்துச் செய்தியினை அனுப்பியிருந்தார். இதனையடுத்து, பாலம் கல்யாணசுந்தரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இது குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கருணை வடிவான அய்யா பாலம் கல்யாணசுந்தரம், ‘’முத்து விழாவுக்கு’’ நான் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவிக்க என்னைச் சந்தித்தார். அவரது பேருள்ளத்துக்கு நாம் தான் நன்றி சொல்ல வேண்டும். சமூகத்துக்காக துடிப்பது அவரது இதயம். அந்த அன்புப் பாலம் அனைவர் மனதிலும் உருவாகட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.