விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, “செல்லும் இடமெல்லாம் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி உள்ளது. தி.மு.க கூட்டணிக்கு மக்கள் ஆதரவை தருகின்றனர். முதலமைச்சரின் பெயர் கூட இங்கிருக்கும் மக்களுக்கு தெரியவில்லை. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அவரே சொல்லிக்கொள்கிறார்.
தமிழ்நாட்டுக்கு வருவதற்கு பிரதமர் மோடிக்கு பயம். அதனால்தான் தன்னை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அவர் வேட்டி அணிந்து மாறுவேடத்தில் வந்து போயிருக்கிறார். கடற்கரையில் குப்பை அள்ளுகிறார்.
பிரதமர் மோடியின் எடுபிடியாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவர்களின் கூட்டணிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் சரியான சவுக்கடி கொடுத்தீர்கள். அதேபோன்று அவர்கள் கூட்டணிக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும்.
மக்களைப் பற்றி கவலைப்படாத அ.தி.மு.க ஆட்சிக்கு இந்த இடைத்தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க வேட்பாளரை நீங்கள் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பி வைத்தால் இந்த தொகுதியில் உள்ள பிரச்னைகளை உங்கள் குரலாக சட்டசபையில் பேசி அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார்.
தேர்தலுக்குத் தேர்தல் வருபவர்கள் நாங்கள் கிடையாது. எப்போதும் மக்களோடு பணியாற்றுகிற கட்சி தி.மு.க. தி.மு.க ஆட்சிக்கு வந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும்.” எனப் பேசினார்.