தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவ்வப்போது மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கலைஞர் நினைவிடத்திற்குச் செல்வது வழக்கம். நேற்று இரவும் அப்படி, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், தயாநிதி மாறன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதே வேளையில் சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமார்- ஞானாம்பிகை தம்பதியரும், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து வந்திருந்த அவர்களது உறவினர்களும், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களைக் காண வந்திருந்தனர்.
தி.மு.க தலைவர் வந்திருப்பதை அறிந்து, அவருடன் பேசிவிடவும், ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் விரும்பியுள்ளனர். அவர்கள் கையசைப்பதைக் கண்ட தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்களை அருகே அழைத்துப் பேசியதோடு, புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.
அப்போது ஞானாம்பிகை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர விசுவாசியான தனது மாமா டாக்டர். சுந்தரவடிவழகன், ஓமனில் பேராசிரியராகப் பணியாற்றுவதாகவும், அவர் தலைவரிடம் வீடியோ கால் மூலம் பேச விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையறிந்த தி.மு.க தலைவரும், அவர்களது போனில், டாக்டர் சுந்தரவடிவழகனுடன் வீடியோ காலில் உரையாடினார். இதனால், சுந்தரவடிவழகன் மற்றும் அவரது உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பொறியாளர் ஞானாம்பிகை, “தலைவருடன் பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது; எங்கள் விருப்பத்தை ஏற்று வெளிநாட்டில் இருக்கும் எங்கள் மாமாவுடன் பேசியதும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
கலைஞர் மறைவுக்குப் பின்னர் தலைவர் மு.க.ஸ்டாலின் மிகத்திறம்பட கட்சியை வழிநடத்திச் செல்கிறார். தொண்டர்களை அரவணைத்துச் செல்வதில் கலைஞருக்கு நிகராகச் செயல்படுகிறார் தலைவர் ஸ்டாலின்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.