தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வருகிற 21ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக தி.மு.க சார்பில் நா.புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது வேட்பு மனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
இதற்கிடையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் பணி பொறுப்புக்குழுவை கடந்த செப்.,25ம் தேதி தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்தது.
அதில், பொறுப்புக்குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் பொன்முடி, குழு செயலாளராக மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன், குழு உறுப்பினர்களாக எம்.எல்.ஏக்கள் மஸ்தான், கிருஷ்ணசாமி மற்றும் அங்கயற்கண்ணி, செல்வ கணபதி, ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக கே.என்.நேரு, கிழக்கு ஒன்றியத்துக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காணை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக எ.வ.வேலு, தெற்கு ஒன்றியத்துக்கு தா.மோ.அன்பரசன், கோலியனூர் மேற்கு ஒன்றியம், விக்கிரவாண்டி பேரூருக்கு ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி மற்றும் காணை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது. பொறுப்பாளர் எ.வ.வேலு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.
திறப்பு விழாவின் போது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வரவேற்பளித்து உற்சாகப்படுத்தினர். மேலும் இந்நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.