தி.மு.க இளைஞர் அணி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருப்பூர் வந்தார் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
பெரியாரும் அண்ணாவும் முதன்முதலில் சந்தித்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருப்பூர் இரயில் நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், திருப்பூர் மாநகரத்தின் 42வது வார்டு பகுதியில் தி.மு.க இளைஞரணி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தொகுதிக்கு 10,000 பேர் என்ற அடிப்படையில் 30 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
அந்த இலக்கைத் தாண்டியும் உறுப்பினர்களைச் சேர்ப்போம் என்ற நம்பிக்கை, இளைஞர்களின் வரவேற்பைப் பார்க்கும்போது ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் சரியான பாதையை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் தி.மு.க ஆட்சி வரும். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பார். அப்போது இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் செல்வராஜ், இளைஞர் அணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.