சிலைதிறப்பு பொதுக்கூட்ட விழாவில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும். அண்ணா என்றால் மொழி மற்றும் இன உணர்வும். கலைஞர் என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும். இவர்களது சிலைகள் இந்த தத்துவத்தை தான் இன்றைக்கும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும், சமூகநீதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய காலம் தற்போது உருவாகி உள்ளது. எனவே தான் முன்பைவிட கலைஞர் நமக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகிறார்.” என அவர் தெரிவித்துள்ளார்.
சிலைதிறப்பு பொதுக்கூட்ட விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழில் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கினார்.
“அன்பு சகோதரர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மண்ணின் மைந்தனாக திகழ்ந்தவர் கலைஞர் . அவரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொண்டு சிலையை திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் பெருமைப்படுகிறேன். கழகத் தோழர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபட்டவர் கலைஞர். விவசாயிகளுக்காகவும். சிறுபான்மையினர்களுக்காக, கிறிஸ்தவர்களுக்காக பாடுபட்ட மாமனிதராக வாழ்ந்தவர் கலைஞர். அனைத்து சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காகவும் போராடியவர் கலைஞர்.
என்னுடைய நாடு இந்தியாவாக இருந்தாலும் நான் பிறந்தது வங்க நாட்டில். இதேபோல் ஸ்டாலின் அவர்களும் இந்தியாவில் இருந்தாலும், அவர் பிறந்தது தமிழ்நாட்டில். அதுபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு. ஒரு உரிமை இருக்கிறது. அந்த உரிமைக்காக நாம் போராடுவோம்.
தமிழக மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் மாநில தமிழக மக்கள் மாநில உரிமையை விட்டுக் கொடுக்காத மக்கள். இதைப் போன்று தொடர்ந்து நாம் நம் மாநில உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டும்.
தலைவர் கலைஞர் அவர்களும் மாநில உரிமைகளை தாரைவார்த்துக் கொடுக்ககாமல் போராடியவர். அதேபோன்று இளைஞர்களாகிய நீங்களும் மாநில உரிமைகளையும், நம்முடைய அடையாளத்தையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் வலிமையுடன் எதிர் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” . என அவர் தெரிவித்துள்ளார்.
சிலைதிறப்பு பொதுகூட்ட விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது, “கலைஞர் எதிர்நிச்சல் அடித்துதான் வெற்றி பெற்றார், கலைஞர் நெருக்கடி காலத்தில் வாள்முனையை விட வேகமாக பேனா முனையை சுழற்றி எதிர்நிச்சல் அடித்தார்.
மக்களுக்காக சமூகத்துக்காக அரசியலில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் கூட்டம் இங்கு ஒருங்கிணந்துள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் அனைவரும் எதிர் நீச்சல் போட கூடியவர்கள் எதிர் நீச்சல் போட்டு முன்னேற கூடியவர்கள். அதேபோன்று மேற்கு வங்கத்தில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் மம்தா பானர்ஜி இங்கே சிலையை திறந்து வைப்பதற்கு சரியானவர் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு எல்லாம் ஒன்று ஒன்று என்று சொல்லிக் கொண்டிருக்கும் மோடி. சாதி மதம் ஒன்று என்று கூறுவாரா” என அவர் தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைதிறப்பு பொதுக்கூட்ட விழாவில், கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்துவிட்டார் என்று சொல்ல முடியுமா அல்லது மறைந்தார் என்றால் நம்ப முடியுமா?. இல்லை, கடைசி தமிழனின் இறுதி சொட்டு உள்ளவரை கலைஞர் இந்த மண்ணில் வாழ்ந்துக்கொண்டே இருப்பார்.
கலைஞருக்கு சிலை என்பது கலைஞருக்கு செய்யப்படும் சிறப்பு அல்ல, தமிழர்கள் நாம் நன்றி காட்டுவதற்கு செய்யப்படும் குறியீடு ஆகும். சிங்கப்பூரின் முதல்வராக இருந்த லீக் குவான் யூ பதிவி விலகும் முன்பு அவருக்கு சிலை நிறுவவேண்டும் என அந்நாட்டு அமைச்சரவை முடிவு எடுத்தது. ஆனால் லீக் அதனை மறுத்துவிட்டார். அப்போது அவர் சொன்னார்” சிங்கப்பூர் தான் நான் கட்டி எழுப்பிய நினைவு சின்னம். அதனால் தனியாக சிலைவேண்டாம்” என தெரிவித்தார்.
அதேப்போல் கலைஞருக்குச் சொன்னால் தமிழகம்தான் அவர் கட்டி எழுப்பிய நினைவுச் சின்னம், தமிழ் தான் அவர் கட்டி எழுப்பிய நினைவுச் சின்னம், திருவள்ளுவர் சிலை தான் அவரின் நினைவுச் சின்னம், விதவை மறுமணம் என இவையனைத்தும் தான் அவரின் நினைவுச் சின்னம். எனவே கலைஞருக்கு சிலை என்பது நம்முடைய மகிழ்ச்சிக்காக தான் என நான் எடுத்துக்கொள்கிறேன்”. என அவர் தெரிவித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைதிறப்பு பொதுகூட்டவிழாவில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “டாக்டர் கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், ஏழை மக்களுக்கும் பெரிதும் உறுதுணையாக இருந்தார். அவரின் புகழ் என்று சொன்னால், சொல்லிக்கொண்டே போகலாம்.
புதுச்சேரிக்கும், கலைஞருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அங்கு கூட்டணி ஆட்சி அமைக்க கலைஞர் வகுத்த வியூகம் பெரிதும் உதவியாக இருந்தது. முன்னதாக கலைஞர் இறந்த செய்தி கேட்ட அன்றே எங்கள் அமைச்சரவையை கூட்டி, புதுச்சேரியிலும் காரைக்கால் பகுதியிலும் கலைஞருக்கு வெண்கல சிலை வைக்க முடிவு எடுத்தோம் அதற்காக நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்” என தெரிவித்தார்.
தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ உசேன் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ''பெரியாரின் மாணவர், அண்ணாவின் தம்பி, கலைஞர் தமிழர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கிறார். லட்சியத்தோடு வாழ்ந்ததால் தான் மறைந்தும் மறையாமல் உள்ளார் கலைஞர். கலைஞர் இன்றும் தேவைப்படுகிறார், அவரின் ஐம்பெரும் உறுதிமொழிகள் ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்'' இவ்வாறு தெரிவித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி திராவிட கலக தலைவர் கி.வீரமணி கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அவருடன் சென்ற திராவிட கலகத் தோழர்கள் 'கலைஞருக்கு வீரவணக்கும் செலுத்தி’ முழக்கங்களை எழுப்பினர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கோபாலபுரத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் இல்லத்தில் உள்ள திருவுருவப் படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி தி.மு.க எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதிமாறன் ஆகியோர் கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்ற தொண்டர்கள் கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.