தமிழக முதல்வராக 5 முறை பணியாற்றியவரும், தி.மு.க தலைவருமான கலைஞருக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்குவதோடு, நாடாளுமன்றத்தில் அவருக்கு முழு உருவச் சிலைநிறுவ, மத்திய அரசு முன்வர வேண்டும் என தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது.
சமீபத்தில், மாநிலங்களவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் பி.வில்சன், கலைஞருக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மக்களவையில் நேற்றுப் பேசிய தர்மபுரி எம்.பி., டாக்டர்.செந்தில்குமார், கலைஞருக்கு சிலை அமைக்கவேண்டும் எனவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
முன்னதாக, கடந்த ஆண்டே கலைஞருக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் என திருச்சி சிவா எம்.பி., மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. “80 ஆண்டு பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகாலம் தி.மு.க-வின் தலைவராக இருந்தவர் கலைஞர். அடித்தட்டு மக்கள் வாழ்க்கை மேம்பட பெரும் பங்காற்றியவர். சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியையே சந்திக்காதவர். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கலை, இலக்கியம், அரசியல் என பன்முக தன்மை கொண்ட தலைவர் கலைஞர். கலைஞரின் இழப்பு வரலாற்றுப் பேரிழப்பு. கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்” என கோரினார் திருச்சி சிவா.
இதையடுத்து, கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு குழு ஒன்றை நியமனம் செய்துள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதைப்பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று மக்களவையில் பேசிய டாக்டர்.செந்தில்குமார் எம்.பி., “பிரச்னைக்குரிய மசோதாக்களை தாக்கல் செய்து, அவற்றை அவசர அவசரமாக நிறைவேற்றுவதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மை பலம் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? பெண்கள், குழந்தைகள், ஏழைகள் மற்றும் நலிவுற்ற சமூகத்தினருக்கு, நாடாளுமன்றம் என்ன நன்மை செய்யப்போகிறது என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அந்தப் பெருந்தன்மை அரசிடம் இல்லை.
ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்காக, ஜெனரல் டயர் மீது விசாரணை நடைபெற்றது. ஆனால், தூத்துக்குடியில் ஒரு இளம்பெண் உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உருப்படியாக ஒரு விசாரணையும் இதுவரை இல்லை” எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், அவர் பேசுகையில், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞருக்கு, 'பாரத் ரத்னா' விருது வழங்கவேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில், கலைஞரின் முழு உருவச்சிலையை நிறுவிட மத்திய அரசு முன்வர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.