நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது அ .தி.மு.க.,வின் முறைகேட்டினால் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனையடுத்து வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க சார்பில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
அதன் ஒருபகுதியாக இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் முன்னிலையில் வாக்குகள் சேகரித்தார் மு.க.ஸ்டாலின். அவருடன் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தை ஆளும் இரட்டையர்கள் ஆட்சி - இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கின்றது; நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையின சமுதாயத்தினரின் நூறு சதவிகித வாக்குகளை தி.மு.கழகம் பெற்று வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “வருகிற 5-ம் தேதி நடைபெற இருக்கக்கூடிய வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கக் கூடிய தம்பி கதிர் ஆனந்த் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தர நீங்கள் எல்லோரும் துணை நின்று ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக, நான் வந்திருக்கின்றேன்.
நீங்கள் ஏற்கனவே முடிவெடுத்து வைத்திருக்கின்றீர்கள். முடிவெடுத்து வைத்திருக்கின்ற உங்களிடத்தில் வந்து ஆதரவு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் அதனை உறுதிப்படுத்துவதற்காக, உங்களை நான் சந்திக்க வந்திருக்கின்றேன்.
அண்ணன் துரைமுருகன் அவர்கள் இங்கு பேசுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார். இஸ்லாமிய சமுதாயத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எப்படிப்பட்ட உறவு தொடர்ந்து அறிஞர் அண்ணா அவர்கள் காலத்திலிருந்தும், தலைவர் கலைஞர் அவர்கள் காலத்திலிருந்தும் இருந்து கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பிட்டிருந்தார்.
முதன்முதலில் 1967-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களோடு ஒரு தேர்தல் கூட்டணி அமைத்துக்கொண்டு இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏற்படக்கூடிய இன்னல்களை, துன்பங்களை களைவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு எப்படி பாடுபட்டு - பணியாற்றி இருக்கின்றார்களோ, அது தொடர்ந்து இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
நியாயமாக இந்தத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதமே நடந்து முடிந்திருக்க வேண்டும். ஏன் நடக்காமல் நின்று போனது என்று அதிகம் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கே அது நன்றாகத் தெரியும். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு சூழ்ச்சி சதி நடந்திருக்கின்றது.
ஏனென்றால் அந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையில் அமைந்திருக்கக்கூடிய கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றியினைப் பெறப் போகின்றது என்ற செய்தி, மத்தியில் இருக்கக்கூடிய பி.ஜே.பி ஆட்சி மற்றும் மாநிலத்தில் இருக்கக்கூடிய அ.தி.மு.க ஆட்சி போன்ற இரு ஆட்சிகளுக்கும் காவல் துறையில் இருக்கும் ரகசிய புலனாய்வு துறை எடுத்த கணக்கெடுப்பில் யாருக்கு அதிகமான வெற்றி வாய்ப்பு கிடைக்கப் போகின்றது என்று பார்க்கும் பொழுது தி.மு.க.விற்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற செய்தி அவர்களுக்கு போய்விட்டது.
அதனால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரு சூழ்நிலையில்தான் தி.மு.க.விற்கு களங்கத்தை ஏற்படுத்த அண்ணன் துரைமுருகன் அவர்கள் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொன்னால், அது தி.மு.க.வையே பாதிக்கும் என்றெல்லாம் நினைத்து திட்டமிட்டு அந்தக் காரியத்தைச் செய்தார்கள். அதனால் தான் தேர்தல் நின்று போனது. ஆனால் நடந்து முடிந்த தேர்தல்களில் என்ன முடிவு வந்தது என்றால், நியாயமாக அவர்கள் சொன்ன பொய் பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபட்டிருந்தால் தி.மு.க என்னவாகியிருக்கும்? தி.மு.க அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்காது.
ஆனால், தேர்தல் முடிவுகளில் புதுவை உள்ளிட்ட பகுதியையும் சேர்த்து 39 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் நம்முடைய அணி 38 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால் என்ன காரணம். மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை தவறான பிரச்சாரத்தை நம்பவில்லை என்பது தான் அதன் முடிவு. அதனால், தான் இப்பொழுது இந்த தேர்தலை நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்திருக்கின்றோம். எனவே புதுவையும் சேர்த்து நம் 38 எம்.பி.க்கள் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்காகவும் சேர்த்து குரல் கொடுக்கின்ற ஒரு கட்சியாக, அமைப்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய எம்.பி.க்கள் எல்லோரும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த 38 எம்.பி.க்களோடு 39-வது எம்.பி.யாக கதிர் ஆனந்த் அவர்களும் செல்ல வேண்டும். நிச்சயமாக அதற்கான வாய்ப்பினை நீங்கள் ஏற்படுத்தித்தரத்தான் போகின்றீர்கள். நம்முடைய வேட்பாளர் தம்பி கதிர் ஆனந்த் அவர்கள் பேசுகின்ற பொழுது எம்.பி ஆனபிறகு என்னென்ன செய்யப் போகின்றார்? என்னென்ன உறுதிமொழிகள் எல்லாம் இந்த தொகுதிக்கு தந்திருக்கிறேன் என்று உங்களிடத்தில் எடுத்துச் சொன்னார். உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து, உங்கள் தொண்டனாக இருந்து, உங்களில் ஒருவனாக இருந்தும் பணியாற்றுவேன் என்று உறுதி கொடுத்திருக்கின்றார். அந்த உறுதிமொழியை அவர் நிச்சயம் காப்பாற்றுவார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்னவென்று தயவு செய்து நினைத்து பாருங்கள். முத்தலாக் என்ற ஒரு கொடுமையான மசோதாவைக் கொண்டு வந்து, பாராளுமன்றத்திலும் அதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றி முடித்த நேற்றைய தினம் ஜனாதிபதி அவர்களும் கையெழுத்துப் போட்டிருக்கக்கூடிய ஒரு அக்கிரமம் நடந்து முடிந்திருக்கின்றது. அதை நாம் கடுமையாக தொடர்ந்து எதிர்த்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளும் அதனை எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.
நாம் மட்டுமல்லாமல் ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வினரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கின்றார்கள். 5 மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அவர்கள் அப்பொழுது இந்த முத்தலாக் மசோதா வரக்கூடாது. வந்தால் எங்கள் சமுதாயத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கடுமையாக எதிர்த்துப் பேசியிருந்தார்.
ஆனால், இப்பொழுது நாடாளுமன்றத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன், தேனியின் நாடாளுமன்ற உறுப்பினர், மத்தியில் ஆளக்கூடிய பி.ஜே.பி அரசு கொண்டு வரும் இந்த மசோதாவை ஆதரித்து பேசி இருக்கின்றார். ஆதரித்துப் பேசி ஓட்டு போட்டிருந்தால் கூட மன்னித்து விடலாம். ஆனால், மன்னிக்கக் கூடாது என்பது வேறு ஒரு பேச்சுக்குத் தான் நான் சொல்கின்றேன். ஆனால், அதனால் என்னென்ன நன்மை என்பதை பெரிதுபடுத்தி வேகப்படுத்தி வந்தே தீர வேண்டும் என்ற நிலையில் அதனை ஆதரிப்பதற்கு என்ன காரணம் என்றெல்லாம் அழுத்தம் திருத்தமாக பேசியிருக்கின்றார்.
இவர் பேசியதும் அடுத்த நாள் அ.தி.மு.க அமைச்சர்களும் முக்கியமான ஒருவர் என்ன சொல்கின்றார் என்றால் 'Tongue Slip'-ல் பேசிவிட்டார் என்று சொல்கின்றார். ஏதாவது தேதியை மாற்றி பேசினால், இல்லை பெயரை ஏதாவது மாற்றி பேசினால் அது tongue slip.
ஆனால், இந்த சட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து ஒரு மிகப்பெரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார். அது tongue slip-ஆ? அதைத்தான் தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே இரட்டைவேடம் போடுகின்றது. மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி நவநீதகிருஷ்ணன் அவர்கள் இந்த சட்டம் வரக்கூடாது என்று கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கின்றார். உள்ளபடியே மகிழ்ச்சியாக இருந்தது.
தி.மு.க மட்டுமல்ல ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் எதிர்க்கப் போகின்றது என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். பேசிவிட்டு கடைசியில் என்ன செய்கின்றார்கள் என்றால் ஓட்டுப் போடும் பொழுது வெளி நடப்பு செய்திருக்கின்றார்கள். 5 ஓட்டில் தான், அரசு கொண்டுவந்த தீர்மானம் வென்றுள்ளாது. ராஜ்ய சபாவில் இருக்கக்கூடிய அ.தி.மு.க எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தார்கள் என்றால் இந்த சட்டம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது.
ஆனால் என்ன செய்திருக்கின்றார்கள் என்றால் ஆதரித்தும் ஓட்டுப் போடாமல், எதிர்த்தும் ஓட்டு போடாமல் வெளிநடப்பு செய்து விட்டார்கள். வெளிநடப்பு செய்கின்ற பொழுது அந்த ஓட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவையில் இருக்கக்கூடியவர்களை வைத்துதான் ஒட்டுமொத்தமாக கணக்கெடுத்து யார் ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள் எதிர்த்து ஓட்டுப் போட்டார்கள் என்று கணக்கெடுத்து சொல்வார்கள்.
ஏன் வெளி நடப்பு செய்தார்கள் என்றால், மோடி கோபித்துக்கொள்வார். மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும் இங்கு இந்த ஆட்சி இருக்காது. எனவே வேலூரில் நடக்கக்கூடிய இந்தத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாய மக்களின் ஓட்டுக்களை எல்லாம் வாங்க வேண்டும் என்ற நாடகம் போட்டு எதிர்த்துப் பேசி விட்டார்கள்.
ஆனால் மோடியை சமாதானம் செய்ய வேண்டும் என்பதற்காக ஓட்டு போடாமல் வெளியில் வந்து விட்டார்கள். எனவே, தமிழ்நாட்டில் எப்படி இரட்டையர்கள் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றதோ!? அதே போல் இதிலும் இரட்டை வேடம் போடக் கூடிய நிலை இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்றது.
இதைப் பற்றி எல்லாம் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இதனை உங்களுக்கு நினைவு படுத்தி உங்களுக்காக பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மட்டுமல்ல, சிறுபான்மையின மக்களுக்கும் தொடர்ந்து பாடுபடக்கூடிய பணியாற்றிக்கொண்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்றைக்கும் நீங்கள் துணை நிற்க வேண்டும்.
வேட்பாளர் சொன்னது போல் அவர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருப்பார். உங்களுடைய பிரச்சினைகளை கவனிப்பார். முன்பெல்லாம் எம்.எல்.ஏ.க்களை எம்.பி.க்களை தேடி மக்கள் போக வேண்டும். அந்த நிலைமை இப்பொழுது மாறிப்போய்விட்டது மக்களைத் தேடி இன்றைக்கு எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் வரவேண்டிய சூழ்நிலை காலத்திற்கேற்ப மாறி இருக்கின்றது. எனவே நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும் உங்களைத் தேடி நாடி வருவோம். என்றைக்கும் உங்களுக்காக பணியாற்றுவோம் என்ற அந்த உறுதியை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி. நம்முடைய தம்பி கதிர் ஆனந்த் அவர்களுக்கு சிறப்பான வெற்றியை தேடித் தருவதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.
சென்ற தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் தான் நூற்றுக்கு நூறு சதவிகிதம் தி.மு.க அணிக்கு ஓட்டு போட்டிருக்கின்றார்கள் என்பது ஓட்டு விகிதாச்சாரத்தை பார்க்கின்றபோது தெரிகின்றது. அதனால்தான் சொல்கின்றேன் அதிகம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று. இருந்தாலும் உங்கள் நண்பர்கள், தோழர்கள், உறவினர்கள், ஜமாத்தில் இருக்கக்கூடிய சகோதரர்கள் அத்தனை பேருக்கும் நீங்கள் எடுத்துச் சொல்லி ஆதரவு தரக்கூடிய வகையில் துணை நின்று உங்கள் ஆதரவினை தேடித் தரவேண்டும்” என அவர் பேசினார்.