ஆண்டிப்பட்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.ம.மு.க.,வின் கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்தவருமான தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஜூன் 28ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.
தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமல்லாது, அவரது ஆதரவாளர்களும் தி.மு.கவில் இணைந்தனர். கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், விரைவில் தேனி மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தப்போவதாகவும், அதில் பல்லாயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் இணைய உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
அதன்படி ஒரே மாதத்தில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இன்று வீரபாண்டியில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்து உள்ளனர். முன்னதாக தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசினார். தற்போது தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன். தேனி மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன். சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேனி ஒன்றிய பொறுப்பாளர் , நகர பொறுப்பாளர் என ஏராளமான தி.மு.க.,வினர் பங்கேற்றுள்ளனர்.