சமீபத்தில் நடந்த (15.7.2019) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்திருத்தத்தை தி.மு.க ஆதரித்தது குறித்து சிலர் சமூக வலைதளங்களிலும் வெளியிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை அரசியலுக்காக திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
தி.மு.கழகம் சிறுபான்மை மக்களின் நலனிலும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் எப்போதும் அக்கறை கொண்ட இயக்கமாகும். மத்தியில் ஆட்சியிலிருக்கும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் மதவாத அரசியலை தொடர்ந்து எதிர்ப்பதிலும் தோலுரித்து காட்டுவதிலும் இந்தியாவிற்கே முன்னோடியாக தி.மு.கழகமும் அதன் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் திகழ்வதை நாடறியும்.
இந்நிலையில் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற மும்பை தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள போதுமான புலனாய்வு அமைப்பு இல்லை என்று அரசு கருதியதை அடுத்து, 2009ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
கடந்த 10 ஆண்டுகளாக இச்சட்டம் அமலில் இருப்பதோடு, இச்சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட புலனாய்வு அமைப்பு புலனாய்வு செய்து பல வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அவ்வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இப்போதும் அமலில் இருக்கும் இச்சட்டத்தில்தான், நான்கு புதிய திருத்தங்கள் இப்போது இந்த அரசால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அவையாவன:
இச்சட்டத்தின் பிரிவுகள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து இந்தியாவின் நலனுக்கும் இந்தியர்களுக்கும் எதிராக குற்றச் செயலில் ஈடுபடும் எவருக்கும் பொருந்தும்.
இச்சட்டத்தின் கீழ் இயங்கும் காவல் அலுவலர்களுக்கு, இந்தியாவிற்கு வெளியிலும் சென்று குற்றம் சம்மந்தமாக விசாரிக்கும் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், சிறப்புரிமைகள் ஆகியவற்றை தருவது.
இச்சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றமொன்றை வெளிநாட்டில் நிகழ்த்தினாலும், அதை இந்தியாவில் நடைபெற்ற குற்றமாகவே கருதி வழக்கு பதிவு செய்வது.
இக்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவது.
இவைகள் தவிர வேறு எந்த திருத்தங்களும் இப்போது இந்த சட்டதிருத்தத்தில் கொண்டு வரப்படவில்லை. நாட்டின் பாதுகாப்பு கருதி நல்லெண்ண அடிப்படையில் 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று, நாடாளுமன்றத்தில் அப்போதேய உள்துறை அமைச்சராக இருந்த திரு. சிதம்பரம் உறுதி அளித்தார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு திருத்தங்கள் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதத்தில் எந்த புது அதிகாரத்தையும் காவல்துறைக்கு வழங்கிடவில்லை யென்பதோடு, வலைதளங்களில் பரப்பப்படுவதுபோல புதிய எந்த பிரிவுகளையும் கூடுதலாக சேர்க்கவும் இல்லை.
இச்சட்டத்திருத்த மசோதாவில் தி.மு.க சார்பில் உரையாற்றிய நான் "நாட்டில் சிவில் சட்டங்களை தவிர, எல்லா கிரிமினல் சட்டங்களும் மதச்சார்பற்றவைகளாகவே இருக்கின்றன; எனவே, இச்சட்டத்தை மதக் கண்ணோட்டத்தோடு அரசு அனுகக்கூடாது. இந்த சட்டத்தை கொண்டுவந்த போது இருந்த அப்போதைய அரசுக்கு இருந்த அரசியல் அடையாளம் வேறு. இப்போதுள்ள அரசுக்கு இருக்கும் அடையாளம் வேறு.
எனவே இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுமோ என்கிற அச்சம் இப்போது பலருக்கும் இருக்கின்றது. அதை களைய வேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கிறது. இந்தியா என்பது இந்துஸ்தான் அல்ல; இது மதச்சார்பற்ற நாடு. இந்தியா இந்துஸ்தான் என்றால் நாடு சிதறுன்டு போகும். சிறுபான்மை மக்களின் மீது இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது. சிறுபான்மை மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தவும் இச்சட்டத்தில் வழிவகை காணவேண்டும்" என்று தெளிவாக வலியுறுத்தியுள்ளேன்.
எனவே, ஏதோ இந்த சட்டம் புதிதாக இப்போதுதான் கொண்டு வரப்படுவது போலவும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவது போலவும், சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமைகளை மறுக்கும் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது போலவும், கொடூரமான வரம்பற்ற அதிகாரங்கள் காவல் அதிகாரிகளுக்கு புதிதாக அளிக்கப்பட்டுள்ளது போலவும், இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வேண்டுமென்றே திரித்து செய்திகளை பரப்பி, தி.மு.க சிறுபான்மை மக்களுக்கு எதிரி என சித்தரிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் எவரும் படித்து தெரிந்து கொள்ள ஏதுவாக இணைய தளத்தில் தொகுக்கப்பட்டுள்ள நிலையில், சிலரால் பரப்பப்படும் இத்தகைய வதந்திகளை எவரும் ஏற்கமாட்டார்கள். மூதறிஞர் கலைஞர் காட்டிய வழியில் அரசியலில் பயணிக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.மு.க என்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு காவல் அரணாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.