டெல்லியில் தி.மு.க கூட்டணி எம்.பிக்கள் நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அமைச்சரவை நேற்று தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு மாணவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு `நெக்ஸ்ட்’ (National Exit Test) என்ற பெயரில் தேசிய அளவில் பொதுத் தேர்வு நடத்தப்படவிருக்கிறது.
நீட் எனும் உயிர்க்கொல்லி தேர்வால் ஆண்டுதோறும் தமிழக மாணவர்களை இழந்து கொண்டிருக்கிறோம். கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்க்கும் நீட் தேர்வை தமிழகம் எதிர்த்து வரும் சூழலில் 'NEXT' தேர்வின் மூலம் அடுத்த வடிகட்டும் திட்டத்தைச் செயல்படுத்த நினைக்கிறது மத்திய அரசு.
இந்நிலையில், நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெல்லியில் அமைந்திருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தமிழக எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவரவுள்ள நெக்ஸ்ட் தேர்வை கண்டித்து தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, இடதுசாரி கட்சிகளின் எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ‘நெக்ஸ்ட்’ தேர்வுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், சமூக நீதியைக் காப்பாற்ற வலியுறுத்தும் பதாகைகளைக் கையில் ஏந்தியபடியும் தமிழக எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.