தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது.
விடுமுறைக்குப் பின் மீண்டும் இன்று சட்டப்பேரவை கூடியுள்ளது. இதில், தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்னையான தண்ணீர் தட்டுப்பாடு பற்றிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது தி.மு.க.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் தோல்வியடைந்துவிட்டன. பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குடிநீர் பிரச்னை குறித்து அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளையும் கேட்கவேண்டும். சடப்பேரவையில் ஒருநாள் முழுவதும் சிறப்பு நிகழ்வாக விவாதம் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்து தி.மு.க உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்துள்ளனர்.