தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது . சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 4 நாட்களுக்கு ஒரு முறை தான் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து, தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக தி.மு.க சார்பில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை பிராட்வே பகுதியில் மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதிமாறன் டேங்கர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட தண்ணீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார். இதேபோல் துறைமுகம் எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி 214 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், '' தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. ஆனால் மத்திய அரசு தமிழகத்துக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம் '' இவ்வாறு கூறினார்.