நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதல்முறையாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது.
விக்கிரவாண்டி தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி, சூலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ், மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சுந்தரதாஸ், பஞ்சவர்ணம், சுப்பிரமணியம், செல்வராஜ், எ.கே.சி.சுந்தரவேல், ராமநாதன், முனுசாமி, சிவசுப்பிரமணியன் ஆயோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "சபாநாயகர் மீது தி.மு.க கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலிறுத்தப்போவதில்லை. அப்போது இருந்த சூழல் தற்போது இல்லை. மேலும் அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம், தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை என்றார். சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வாய்மொழியாக இன்று தி.மு.க திரும்பப் பெற்றது.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குடிநீர் பிரச்னைக்கு தி.மு.க ஆட்சியில் வழங்கிய முக்கியத்துவம் போன்று அ.தி.மு.க ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால் தான் இன்று தமிழகத்தில் இத்தகைய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.