தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்காத எடப்பாடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.கவினர் மாபெரும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை ஜாபர்கான்பேட்டையில், தென்சென்னை மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியம் தலைமையில் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான தி.மு.கவினருடன், பொதுமக்களும் கலந்துகொண்டு காலிக்குடங்களுடன், அ.தி.மு.க அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியம், ”தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பல மாதங்களாக குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக தமிழகத்தில் உள்ள குவாரிகளில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது என்றும், தற்போது குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் நீர் குடிப்பதற்கு உகந்ததில்லை என்றும் முன்னுக்கு பின் முரணாகவே உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பேசியுள்ளார்.
தண்ணீர் பஞ்சம் முழுவீச்சை அடைந்துவிட்ட நிலையில், இதுவரை என்ன செய்தார்கள். பற்றாக்குறையை தடுக்க இனிமேல் என்ன செய்யவிருக்கிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க என்ன வழியென்று பாராமல், மழை வேண்டி யாகம் நடத்தி வருகிறது அ.தி.மு.க அரசு. கையாலாகாதவர்கள் தான் யாகம் நடத்துவார்கள். அரசே யாகம் செய்வது கையாளாகத்தனத்தையே காட்டுகிறது.” என குற்றஞ்சாட்டியுள்ளார்.