தி.மு.க

“மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்” : தி.மு.க மாணவரணி எச்சரிக்கை

‘நீட்’ - மும்மொழி திட்டம் - பாரதிக்கு ‘காவி’ தலைப்பாகை என தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து மாபெரும் போராட்டம் வெடிக்கும் : தி.மு.க மாணவர் அணி எச்சரிக்கை.

“மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்” : தி.மு.க மாணவரணி எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘நீட்’ - மும்மொழி திட்டம் - பாரதிக்கு ‘காவி’ தலைப்பாகை’ என தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து தி.மு.க மாணவர் அணி சார்பில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. அறிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை எளிய - தாழ்த்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியரின் மருத்துவக் கனவை தகர்க்கும் வகையில், மத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட “நீட்” தேர்வால் தோல்வி அடைந்து அவமானப்பட்டு, தற்கொலை செய்த மாணவமணிகளின் பட்டியல் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைப் பற்றி மாநில முதலமைச்சர் எடப்பாடியும் கவலைப்படவில்லை - இந்திய பிரதமர் மோடியும் அலட்சியப் போக்குடன் இருந்து வருகிறார்.

ஏற்கனவே அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா ஆகியோர் நீட் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ள நிலையில், இந்த ஆண்டு திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஷ்யா, மரக்காணம் மோனிஷா ஆகியோர் தற்கொலை செய்துள்ளது கண்டு மாணவரிடையே மிகுந்த வேதனையையும் கவலையையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரிய தீர்மானத்தை சட்டப்பேரவையில் ஒருமித்து நிறைவேற்றியபோதும், அதனை சட்டமாக்கிட மத்திய அரசும் - மாநில அரசும் முயற்சிக்காத காரணத்தால, அடுத்து வரும் பத்தாண்டுகளில் தமிழர்கள் எவரும் மருத்துவராக முடியாத பரிதாபநிலை உருவாக்கியுள்ளது.

தொடக்க நிலையிலேயே, தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வே வேண்டாம் என்று கூறினார். மாணவ, மாணவியரின் உள்ளக் குமுறலை பலமுறை எடுத்துரைத்த தளபதியாரின் கருத்தை மத்திய பா.ஜ.க மோடி அரசும், எடுபிடி எடப்பாடி அரசும் பரிசீலிக்காத காரணத்தால் இன்றைக்கு கொடுமையான நிலையில், தமிழகத்தில் மாணவச் செல்வங்களின் மருத்துவக் கனவு கருகிப் போய்விட்டது.

ஆகவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அடுத்து, தமிழினத்தின் எதிர்கால தலைமுறையினர், அனைத்துத் துறையிலும் வல்லுநர்களாகத் திகழவேண்டும், என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 2009-ஆம் ஆண்டு, அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளின் போது கல்வியாளர்களையும், பிரபலமான நூலகர்களையும் கலந்தாலோசித்து, யாழ்பாணம் நூலகம், மற்றும் சிங்கப்பூர் தேசிய நூலகம் போல அமைந்திட வேண்டும், என்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான் கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்.

பிரமிக்கத்தக்க அளவில் உருவான இந்த நூலகத்தின் அரங்கத்தைக் கண்டு, அமொpக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சாரான ஹிலாரி கிளிண்டன் வியந்து பாராட்டி மகிழ்ந்தார். உலகின் அறிஞர் பெருமக்களும் வியந்து பாராட்டி உள்ளனர்.

புகழ்பெற்ற நூலக அரங்கத்தை, கலைஞர் கட்டினார் என்ற காழ்ப்பின் காரணமாக திருமண அரங்கமாக்கி உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா,

இதனை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், நீதி மன்றத்தை நாடும்படி, தி.மு.க மாணவர் அணிக்கு அறிவுறுத்தினார்.

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் எஸ்.டி.மனோன்மணி என்பவர் மூலம் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்து, பல முறை விசாரணைகளை மேற்கொண்டு, ஜெயலலிதா அரசு மாதக் கணக்கில் வாய்தா கேட்டு சலிப்படைந்த நீதிபதி, 'திருமணம் நடத்த வேறு மண்டபங்களே சென்னையில் இல்லையா? சிறப்பு மிக்க நூலக அரங்கம்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா?” என்று அரசு வழக்கறிஞரிடம் நேரடியாகவே கேள்வி கேட்டார். அரசுக்கு கண்டனம் தெரிவித்துடன், பராமரிப்புப் பணிகளை கண்காணித்திட ஒரு வழக்கறிஞர் ஆணையர் குழுவை நியமித்து, அதில் மனுதாரர் எஸ்.டி.மனோன்மணியையும் இணைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவு எதனையும் நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தியபடிதான், ஜெயலலிதா அரசும், அவருடைய மறைவுக்குப் பின்பு வந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அரசுகளும் நூலகம் பற்றி அலட்சியப்போக்குடன் நடந்து வருகின்றன.

கட்சிக்கு அ.தி.மு.க. என்று பெயர் வைத்துக் கொண்டு, ஆட்சியிலும் அமர்ந்து கொள்ளையோ கொள்ளை என அடித்துக்கொண்டும் சுருட்டிக்கொண்டும் இருக்கிற கும்பல், அண்ணாவின் பெயரால் அமையப்பெற்ற - கலைஞர் அமைத்த பிரமாண்ட நூலகத்தை பராமரிப்பு சிறிதுமின்றி பாழடையச் செய்துள்ளது.

நூலகத்தின் நுழைவு வாயிலின் உயரத்தில் கட்டிடத்தின் முகப்பில், தேனீக்கள் அடைகட்டி உள்ளன. அதை அகற்றிட இன்னும் முயற்சிக்கவில்லை.

குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, மின் விளக்கு வசதி, எதுவுமின்றி, கழிவறைகளின் பக்கம் சென்றால் துர்நாற்றம் பொறுக்க முடியவில்லை. சிறுநீர் கழக்க வெளிப்புறத்தை நாடவேண்டிய அவலநிலை, உள்ளது.

ஒவ்வொரு தளத்திலும், அதிக மின்வசதி இல்லாததால் கும்மிருட்டாக உள்ளநிலையில் காதலர் பூங்காவாக ஆகியுள்ளது. மதுபானம் அருந்துவதற்கும் சிகரெட் புகைப்பதற்குமான இடமாக அனைத்துத் தளங்கள் அமைந்துவிட்டன.

கம்பராமாயணத்தை எழுதியது யார்? என்றே தெரியாத தமிழ்நாட்டு முதலமைச்சரான பழனிசாமிக்கு, அண்ணா நூலகம் அமைந்த பின்னணி தெரியுமா? அதன் ஆற்றல் தான் புரியுமா?

அவரோ அல்லது அமைச்சர்களோ அந்த நூலகத்திற்குள் நுழைந்து தான் பார்த்திருப்பார்களா? இவர்களின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் சாபக்கேடு ஆகும்.

இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரித்து அனைத்து வசதிகளையும் செய்திட வேண்டும்.

அடுத்து, பாசிச கூட்டணியை வேரடி மண்ணோடு பெயர்த்தெறிந்த தமிழர்களை தண்டிக்கும் வகையில், மோடி ஆட்சிப்பொறுப்பேற்ற மறுநாளே, இந்தித்திணிப்பை அறிவித்து, பா.ஜ.க. அரசு பழிவாங்கியது.

தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பைக் கண்டு, குறிப்பாக கழகத்தலைவர் தளபதியாரின் எச்சரிக்கையைக் கண்டு இந்தித் திணிப்பை பின்வாங்கியது - அதுவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில்!

அடுத்து, தமிழ்நாட்டில் பேருந்துகளில் மாணவர்களுக்கு இலவச பயணம் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியான, 1989-ஆம் ஆண்டு, ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தளபதி.மு.கஸ்டாலின் அவர்களால் சட்டமன்றத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டு, சட்டப்பேரவையிலேயே அறிவிக்கப்பட்ட திட்டம் இலவச பஸ் பாஸ் திட்டம் ஆகும்.

ஏழை எளிய மாணவர்களும் கல்வி கற்கும் வகையில் இந்த திட்டம் படிப்படியாக கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ்பாசை கழக அரசு வழங்கியது.

அத்தகையச் சிறப்பினைப் பெற்ற மாணவர்களுக்குரிய இலவச பஸ்பாஸ் திட்டம், ஜெயலலிதா ஆட்சியிலும், இப்போதுள்ள எடப்பாடி ஆட்சியிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இதுவரை வழங்காமல் இந்த அரசு அவமானப்படுத்தி வருகிறது.

பஸ் பாஸ் இல்லாமல் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகள் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் தகாத வார்த்தைகளால் அவமானப் படுத்தப்படுகின்றனர்.

பாடநூல்களை அவசர அவசரமாகத் தயாரிக்கும் வேகத்தில் உள்ள அரசுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் இலவச பஸ்பாசை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பொறுப்புணா;வு இல்லாமல் போனது ஏன்?

இம்மாத இறுதிக்குள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு, இலவச பஸ் பாசை எடபாடி அரசு வழங்க வேண்டும்.

அடுத்து, தமிழகத்தில் +2 பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தின் முகப்பு அட்டையில் மகாகவி பாரதியாரின் தலைப்பாகையை காவி வண்ணத்தில் அமைத்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. யாருடையத் தூண்டுதலில் இந்த அக்கிரமம் நடைபெற்றது? என்பதை, முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் தெரிவிக்க வேண்டும்.

கல்வியாளர்கள் அனைவரும் அந்த புத்தகத்தின் பொருளடக்கத்திலும் காவி முடைநாற்றம் வீசுகிறதா? என்பதை உலகுக்கு அறிவிக்க வேண்டும். இந்த காவி முண்டாசு முகப்பு அட்டைப்புத்தகத்தை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

ஆகவே தமிழக மாணவர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து, வாட்டி வதக்கி, வன்கொடுமையாக வாழ்நாளையே கருகச் செய்திடும், மத்திய மாநில அரசுகளைக்கண்டித்து தி.மு.க. மாணவர் அணி மாபெரும் மாணவர் போராட்டத்தை கையில் எடுக்கும். என்று எச்சரிக்கை செய்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories