ஏப்ரல் 18-ம் தேதி நடந்த மக்களவை மற்றும் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளிவர இருக்கின்ற நிலையில், ஏப்ரல் 26-ம் அன்று அரசின் தலைமை கொறடா எஸ்.இராசேந்திரன் பேரவைத் தலைவர் எஸ்.தனபாலை சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்தார். அந்தக்கடிதத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுவதாக இ.இரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன், எ.பிரபு ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் 18 இடங்களுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்து, அதற்கான தேர்தல் முடிவுகளும் மே 23-ம் தேதி வெளிவர இருக்கின்றன. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலத்திலேயே இந்த 3 உறுப்பினர்கள் மீதும் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால் அதைச்செய்யாமல் தேர்தல் முடிவுகள் வருவதற்குள் அ.தி.மு.க அடுத்த குழப்பத்தை உண்டாக்க ஆயத்தமாகியிருக்கிறது என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
அ.தி.மு.க அரசு குழப்பத்தை உருவாக்க எத்தனை முறை தேர்த் தடுப்பினைப் போட்டாலும் அதனை தி.மு.க எதிர்கொள்ளும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் உறுதியோடு கூறியுள்ளார்.