சினிமா

“அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரையை பதித்தவர்!” - டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

“அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரையை பதித்தவர்!” - டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் பிரபல நடிகராக இருப்பவர் டெல்லி கணேஷ் (81). திருநெல்வேலியை சேர்ந்த இவர், ஆரம்ப காலத்தில் இந்திய விமானப் படையில் 1964 முதல் 1974 வரை பணிபுரிந்தார். இதைத்தொடர்ந்து சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால், தனது விமானப் படை பணியை துறந்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். 1976-ல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் தட்சிண பாரத நாடக சபை என்ற டெல்லியிலுள்ள நாடக குழுவில் நடித்து வந்தார் கணேஷ். இதன் காரணமாகவே இவர் டெல்லி கணேஷ் என்று அறியப்படுகிறார். திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், அதன் பிறகு குணச்சித்திர படங்களில் நடிக்க தொடங்கினார். ரஜினி, கமல், விஜயகாந்த், சூர்யா, விஜய், அஜித் என அப்போது தொடங்கி, தற்போது சிவகார்த்திகேயன் வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் குணச்சித்திரம் மட்டுமின்றி, நகைச்சுவை கதாபாத்திரம், வில்லன் கதாப்பாத்திரம் உள்ளிட்ட பலவற்றையும் ஏற்றுக்கொண்டு நடித்துள்ளார். ‘பசி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது. மேலும் இவருக்கு கடந்த 1994-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் 'கலைமாமணி' விருதும் வழங்கப்பட்டது. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கில் சில படமும், இந்தியில் 1 படமும் நடித்துள்ளார்.

“அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரையை பதித்தவர்!” - டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

தொடர்ந்து திரைப்படங்கள் மட்டுமின்றி, குறும்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றில் நடித்து வந்த இவர், ஒரு டப்பிங் கலைஞரும் ஆவார். இந்த சூழலில் கடந்த 2 - 3 நாட்களாக இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. எனினும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (நவ.09) சென்னை, ராமபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இரவு சுமார் 11.30 மணியளவில் இவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது. தனது 81-வது உயிரிழந்த டெல்லி கணேஷின் இறுதி சடங்குகள், நாளை (நவ.11) நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்களுடன் சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு (2024) இவரது நடிப்பில் இந்தியன் 2, ரத்னம், அரண்மனை 4 ஆகிய திரைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரையை பதித்தவர்!” - டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

இவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ் அவர்கள். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் அவர்கள் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் அவர்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரையை பதித்தவர்!” - டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு வருமாறு :

திரையுலகின் மூத்த கலைஞர் டெல்லி கணேஷ் சார் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மேடை நாடகங்களில் தொடங்கி 400-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என, தான் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தன் முத்திரையை பதித்தவர்.

சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பாளுமையை வெளிப்படுத்திய திறமைக்கு சொந்தக்காரர். அவரின் மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு. டெல்லி கணேஷ் சாரின் மரணத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும், குடும்பத்தார், நண்பர்கள், கலையுலகினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories