தமிழில் பிரபல நடிகராக இருப்பவர் டெல்லி கணேஷ் (81). திருநெல்வேலியை சேர்ந்த இவர், ஆரம்ப காலத்தில் இந்திய விமானப் படையில் 1964 முதல் 1974 வரை பணிபுரிந்தார். இதைத்தொடர்ந்து சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால், தனது விமானப் படை பணியை துறந்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். 1976-ல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
முன்னதாக இதனிடையே சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் தட்சிண பாரத நாடக சபை என்ற டெல்லியிலுள்ள நாடக குழுவில் நடித்து வந்தார் கணேஷ். இதன் காரணமாகவே இவர் டெல்லி கணேஷ் என்று அறியப்படுகிறார்.
திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், அதன் பிறகு குணச்சித்திர படங்களில் நடிக்க தொடங்கினார். ரஜினி, கமல், விஜயகாந்த், சூர்யா, விஜய், அஜித் என அப்போது தொடங்கி, தற்போது சிவகார்த்திகேயன் வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் குணச்சித்திரம் மட்டுமின்றி, நகைச்சுவை கதாபாத்திரம், வில்லன் கதாப்பாத்திரம் உள்ளிட்ட பலவற்றையும் ஏற்றுக்கொண்டு நடித்துள்ளார்.
‘பசி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது. மேலும் இவருக்கு கடந்த 1994-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் 'கலைமாமணி' விருதும் வழங்கப்பட்டது. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கில் சில படமும், இந்தியில் 1 படமும் நடித்துள்ளார்.
தொடர்ந்து திரைப்படங்கள் மட்டுமின்றி, குறும்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றில் நடித்து வந்த இவர், ஒரு டப்பிங் கலைஞரும் ஆவார். இந்த சூழலில் கடந்த 2 - 3 நாட்களாக இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. எனினும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (நவ.09) சென்னை, ராமபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இரவு சுமார் 11.30 மணியளவில் இவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது. தனது 81-வது உயிரிழந்த டெல்லி கணேஷின் இறுதி சடங்குகள், நாளை (நவ.11) நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்களுடன் சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு (2024) இவரது நடிப்பில் இந்தியன் 2, ரத்னம், அரண்மனை 4 ஆகிய திரைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.