பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கானுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி, எழுத்தாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கும் இவருக்கு, அடிக்கடி கொலை மிரட்டல் வருவது நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் இவருக்கு ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் மூலம் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் சல்மான் கான், தான் எங்கு வெளியே சென்றாலும் எப்போதும் பலத்த பாதுகாப்புடன் செல்வார். இந்த சூழலில்தான் கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் வீட்டின் முன் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த விவகாரம் திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சல்மான் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக விக்கி குப்தா, சாகர் என 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விக்கி குப்தா, சாகர் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் அமித் மிஸ்ரா, சல்மான் கானுக்கு தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கறிஞர் அமித் மிஸ்ரா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “சல்மான் கானுக்கும் கேங்க்ஸ்டர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது.
அந்த கேங்க்ஸ்டர் குழு குற்றம் சாட்டப்பட்ட விக்கி குப்தா, சாகர் ஆகிய இருவரையும் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். எனவே இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு கொடுக்கும்படி மகாராஷ்டிரா அரசு, பீகார் அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்று கூறியுள்ளார். இந்த செய்தி கடந்த செப்.4-ம் தேதி வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் அமித் மிஸ்ரா, தாவூத் இப்ராகிமை குறிப்பிட்டுத்தான் பேசியிருந்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டை வைத்ததாக கூறி, வழக்கறிஞர் அமித் மிஸ்ராவுக்கு எதிராக நடிகர் சல்மான் கான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக சல்மான் கான் தரப்பில் பேட்டியெடுக்கப்பட்ட செய்தி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளதாவது :
“சல்மான் கான் மீது வழக்கறிஞர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தவறானது, ஆதாரமற்றது. அக்குற்றச்சாட்டுகள் அவதூறானது, இழிவானது. சல்மான் கானை களங்கப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. சல்மான் கான் பல ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த புகழை களங்கப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் அனுதாபத்தை தேட வேண்டும் என்று நோக்கிலும், கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தியை வெளியிட்டதற்காக செய்தி நிறுவனம் மற்றும் அமித் மிஸ்ரா மன்னிப்பு கேட்கவேண்டும். அதோடு செய்தி நிறுவனம் இது மாற்றுச்செய்தியை வெளியிட வேண்டும். அதோடு ஏற்கெனவே வெளியான செய்தியை திரும்ப பெறவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.