Youtube மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் பிஜிலி ரமேஷ் (46). Youtube-ல் Prank ஷோ மூலம் இணையவாசிகள் மத்தியில் அறிமுகமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ரமேஷ் நட்பே துணை, கோமாளி, பொன்மகள் வந்தாள், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் பல்வேறு திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அனைவர் மத்தியிலும் பிரபலமாக அறியப்பட்டார். தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிகளில் சில ஷோக்களிலும் சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்பட்டார். அதோடு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்றிருந்தார்.
இந்த சூழலில் அண்மைக் காலமாக இவருக்கு உடல்நிலை பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக பேட்டியளித்த வேதனை தெரிவித்து வந்தார். மேலும் குடிபோதைதான் தனது வாழ்க்கையையே மாற்றி விட்டதாகவும், தன்னால் எழுந்துக் கூட நிற்க முடியாமல் தவிப்பதாகவும், எனவே யாரும் தயவு செய்து குடிக்க வேண்டாம் என்றும் பிஜிலி ரமேஷ் அண்மையில் சில Youtube சேனல்களுக்கு உருக்கமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் உடல் நல பிரச்னை காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று (ஆக 26) இரவு சுமார் 9 மணியளவில் காலமானார். நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிஜிலி ரமேஷின் இறுதி சடங்கு இன்று (ஆக 27) மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.