சூதாட்ட செயலியான மகாதேவ் பந்தய செயலியின் கீழ் இயங்கும் ஒரு செயலிதான் Fairplay. இந்த செயலி மூலம் கடந்த 2023-ம் ஆண்டு IPL போட்டித்தொடரானது சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படி சட்டவிரோதமாக IPL தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டதால், IPL போட்டி ஒளிபரப்பு உரிமையாளரான Viacom நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இது தொடர்பாக Viacom நிறுவனம் வழக்கு ஒன்றையும் தொடுத்தது. அதில் இந்த செயலி மூலம் தங்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், இதனை விளம்பரம் செய்து ரசிகர்களை பார்க்க தூண்டியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் Fairplay செயலிக்காக விளம்பரத்தில் நடித்த நடிகர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிரபல பாடகர் பாட்ஷா, நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் சஞ்சய் தத், தன்னால் வர இயலாது என்று கூறி ஆஜராக கால அவகாசம் கோரி போலீசாரிடம் முறையிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது நடிகை தமன்னாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த செயலியின் விளம்பரத்தில் நடித்து, ரசிகர்களை பார்க்க தூண்டியது தொடர்பாக நடிகை தமன்னாவுக்கும் மகாராஷ்டிர சைபர் போலிசார் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர் வரும் ஏப்.29-ம் தேதி சைபர்செல் முன் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.