திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் Oscar விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். இந்த விருந்தானது உலகம் முழுவதுமுள்ள படங்கள், அதன் வேலைகள் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சிறந்தவை எது என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும். கடந்த ஆண்டு கூட RRR திரைப்படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு.." பாடல் Oscar விருதை வென்றது. மேலும் சிறந்த ஆவணப்படமாக The Elephant Whisperers விருதை வென்றது.
இந்த நிலையில் இந்தாண்டுகான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96-வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் Oppenheimer திரைப்படம் மட்டுமே 7 பிரிவுகளின் கீழ் விருதை வென்றுள்ளது. ஒரே படம் 7 விருதுகளை வென்றதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பக்கம் Oppenheimer-ன் வெற்றி பேசப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் இந்த விழாவில் பிரபல மல்யுத்த வீரர் ஜான் சினா, நிர்வாணமாக மேடையில் காட்சியளித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. அதாவது, ஆஸ்கர் விருதை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மெல், ஆஸ்கர் விருதுகளின் சிறப்பம்சங்கள், பின்னணி உள்ளிட்டவையை பேசிக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து பலருக்கும் விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இடையில் பேசிய அவர், “இந்த மேடையில் திடீரென யாராவது ஆடைகளின்றி நிர்வாணமாக நடந்து வந்தால், எப்படி இருக்கும்? நிர்வாணமாக ஓடுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? அது பைத்தியக்காரத்தனமாக இருக்காதா?” என்று திடீரென பேசினார். அந்த நேரத்தில் பிரபல் மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சினா, மேடையில் ஆடைகளின்றி காட்சியளித்தார்.
தனது அந்தரங்க பாகங்களை ஒரு அட்டையால் மறைத்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்த ஜான் சினா, மைக்கை எடுத்து பேசத் தொடங்கினார். அப்போது, ஆடைகள் குறித்த முக்கியத்துவம் பற்றி பேசினார். மேலும் ஆண்கள் உடல் ஒன்றும் கேலிப்பொருள் அல்ல என்றும், எனக்கான ஆடையில் மட்டுமே நான் விளையாடுவேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த அவர், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவித்தார். இதையடுத்து அங்கிருந்த திரைச்சீலையை அவர் மேல் அங்கிருந்தவர்கள் போர்த்திவிடவே, Poor Things படத்திற்காக சிறந்த ஆடை வடிவைப்பாளாராக Holly Waddington-க்கு ஜான் சீனா விருதை வழங்கினார். ஆடை வடிவமைப்பாளருக்கு விருது கொடுப்பதற்காக ஆடைகளின்றி மேடைக்கு வந்த ஜான் சினாவுக்கு பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஜான் சினா மேடையில் ஆடைகளின்றி காட்சியளிக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 96-வது ஆஸ்கர் விருதில் சிறந்த படம், இயக்குநர் உட்பட 7 பிரிவுகளின் கீழ் Oppenheimer திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.