கடந்த ஆண்டு (2023) இறுதியில் நடிகர் மன்சூர் அலிகான் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ர். நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசினார். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், இதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார். இவரைத்தொடர்ந்து குஷ்பூ, லோகேஷ், சிரஞ்சீவி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
தொடர்ந்து இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுத்திய நிலையில், இவர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மகளிர் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்ததோடு, திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பும் கேட்டார். த்ரிஷாவும் மன்னித்து விட்டதாக தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் நிறைவடைந்தது என்று அனைவரும் எண்ணினர்.
ஆனால் மன்னிப்பு கேட்ட பிறகு கூட, முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு எதிராக ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும் நீதிபதி, பெண்களை பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்தால், கண்டனங்கள் வருவது இயல்பு என்றும், உரிமையியல் நடைமுறை சட்டப்படி மூன்று பேருக்கும் எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது என்றும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதால், இந்த வழக்கு விளம்பர நோக்கத்திற்காக தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகவும் தெரிவித்தார்.
அதோடு இதற்காக மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்த நீதிபதி, இது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து இந்த தொகையை செலுத்த கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஷபிக் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டுமென்று தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிதிக்கவும் மறுத்தனர். அதோடு அந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் அல்லது பணத்தை கட்ட முடியுமா, முடியாதா என்று தெரிவிக்கலாம் என்று மன்சூர் அலிகன தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.