ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களே அதிகம் வெளியாகும். கடந்த ஆண்டுகூட விஜயின் ’வாரிசு’, அஜித்தின் ’துணிவு’ படம் வெளியானது. ஆனால் இந்த ஆண்டு இப்படி உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகவில்லை. இதற்கு மாறாகப் பொங்கல் ரேஸில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதி மெரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 படங்களில் வெளியாகியுள்ளது. இந்த நான்கு படங்களும் கலவையான வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நான்கு படத்தில் பெரிய நட்சத்திரம் தனுஷ் என்பதால் அவரது கேப்டன் மில்லர் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் புரட்சி, போராட்டம் போன்ற வித்தியாசமான கதைகளம் என்பதால் ரசிகர்களுக்கு படம் பிடிக்குமா என்ற ஐயம் இருந்தது. ஆனால் இதை எல்லாம் தனது நடிப்பால் தகர்த்தெறிந்து அனைவரும் ரசிக்கும் படியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது கேப்டன் மில்லர்.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,"ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், நடிகர் சிவராஜ்குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி பிரகாஷ், சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன்உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாகப் பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்." என தெரிவித்துள்ளார்.
அதேபோல் சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதி மெரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 படங்களும் வரவேற்பைப் பெற்று வருகிறது.