விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியான திரைப்படம்தான் ‘12th Fail’. நேரடி ஒடிடி-யில் வெளியான இந்த படத்தில் விக்ரந்த் மாஸ்சி, மேதா சங்கர், ஆனந்த் வீ ஜோஷி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
12-ம் வகுப்பில் பிட் அடித்தும் 2 முறை தோல்வியடைந்த மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவன், போலீஸ் அதிகாரி ஒருவரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்று போலீஸ் அதிகாரியாக மாற நினைக்கிறன். ஆனால் அந்த சமயம் அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதால், அவரை போல் ஒருவரது உதவியால் டெல்லியில் வந்து UPSC தேர்வுக்கு படிக்கிறார்.
அப்போது அவருக்கு வரும் சோதனைகள், ஏழ்மை நிலை, காதல், பணம் உள்ளிட்ட அனைத்தையும் தாங்கி கொண்டு அந்த தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆகிறாரா? இல்லையா? என்பதே கதை. ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதும்போது தோல்வியை சந்தித்து மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் இவர் வெற்றி பெறுவாரா ? என்ற நிலையை சுவாரஸ்யமாக கூறும் இந்த படம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
Disney+ Hotstar தளத்தில் ஹிந்தி மொழியில் வெளியான இந்த படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மனோஜ் குமார் ஷர்மா என்ற கதாபாத்திரத்தில் விக்ரந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், விக்ரந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
இதுகுறித்து விக்ரந்த் பேசியதாவது, "இந்த திரைப்படத்தில் மனோஜ் குமார் ஷர்மாவாக நடித்தது மனதளவில் என்னைப் பெரிதும் பாதித்தது. 'A Death in the Gunj' படத்தை போன்றே இதுவும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. இது உண்மை கதாபாத்திரம் என்பதால் உணர்வு பூர்வமாக நடித்தேன். இந்த படப்பிடிப்பின்போது இயக்குநர் விது வினோத் சோப்ரா, 'கட்' சொன்னாலும், நான் அழுது கொண்டேதான் இருப்பேன். என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரம் என்னைப் பாதித்தது" என்றார்.