தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தற்போது தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சியில் நடத்தப்பட்டு வருகிறது.
அதே போல, தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக பல்வேறு பங்கை ஆற்றியுள்ளார். இதன் காரணமாக தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்கமுடியாத சின்னமாக கலைஞர் திகழ்ந்து வருகிறார். அதனை போற்றும் வகையில் தமிழ் திரையுலகம் சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. 400 தயாரிப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இந்த விழாவில் தமிழ் திரைப்படத் துறையினர் மட்டுமில்லாமல் இந்திய திரைப்பட துறையினர் அனைவரையும் ஒன்றுபட முயற்சி செய்து வருவதாக FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார். மேலும் இதனை முன்னிட்டு 23, 24 ஆகிய தேதிகளில் இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது என்றும், இந்த விழாவை இந்தியாவிலேயே சிறந்த நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி திரைத்துறையினர் 100% வரை அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது என்றும், அதே போல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மலையாள நடிகர்கள் மோகன்லால், சிரஞ்சீவி கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோருக்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டிசம்பர் 24-ம் தேதி நடைபெற இருந்த இந்த விழாவை, தற்போது ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழ் திரையுலகில் கலைஞர் 100 விழா ஜனவரி 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்து.
இதுகுறித்து FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் விதமாக ‘கலைஞர் 100’ என்ற மாபெரும் விழா வருகின்ற டிசம்பர் மாதம் 24-ம் தேதியில் நடைபெறுவதாக இருந்தது. இந்த விழா, மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தின் காரணமாக வருகின்ற ஜனவரி மாதம் 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே ஏற்கனவே விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த டிசம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளில் படப்பிடிப்பு நடத்தலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். விழா நடைபெற உள்ள நாளான ஜனவரி 6ஆம் தேதியை முன்னிட்டு, ஜனவரி 5 மற்றும் 6 தேதிகளில் படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளும் உள்ளுர் மற்றும் வெளியூர் எங்கும் நடைபெறாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் ஜனவரி 1 முதல் 5 வரை நடன காட்சிகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். பாடல் காட்சிகள் நடத்த வேண்டிய கட்டாய அவசியம் இருப்பின் சிறப்பு அனுமதி பெற்று பாடல் காட்சிகள் அமைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.