தற்போது தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறும்படம் இயக்குநராக வெற்றிபெற்ற இவர், 2016-ல் 'அவியல்' என்ற ஆந்தோலஜி படத்தில் 'களம்’ என்ற படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து 2017-ல் வெளியான 'மாநகரம்' படம் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானார்.
மாநகரம் திரைப்படம் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பேசவில்லை பெறவில்லை என்றாலும், இது அவருக்கு ஒரு நல்ல பெயரை கொடுத்தது. எனினும் 2 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ரசிகர்கள் மத்தியில் யார் இந்த லோகேஷ் என்ற தேடல் உருவானது.
அந்த படத்தை தொடர்ந்து அவரது அடுத்த படம் 'கைதி' படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், மீண்டும் 2 ஆண்டுகள் கழித்து விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து ரசிகர்களை மேலும் கவர்ந்தார். அதோடு இந்த படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்...' பாடல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டே கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தை இயக்கி, மேலும் பட்டிதொட்டி எங்கும் லோகேஷ் கனகராஜை தெரியாத ஆட்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு பெயர் பெற்றார். பெரும் வரவேற்பை பெற்ற இந்த படமானது 'கைதி' படத்துடன் இணைந்த கதையாக அமைந்துள்ளது. இதனால் 'லோகேஷ் சினிமட்டிக் யுனிவர்ஸ்' (LCU) என்று ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.
அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படம் கூட, LCU-வின் பாகம் ஆகும். இவரது அனைத்து படங்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்த நிலையில், லியோ பட வெளியீட்டுக்கு முன்னர், தான் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கவுள்ளதாக அவரே தெரிவித்திருந்தார். மேலும் அதில் தனது கனவு படமான 'இரும்பு கை மாயாவி' படத்தை நிச்சயம் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், லோகேஷ் கனகராஜ் தான் புதிதாக 'G Squad' என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும், இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் முதலில் தனது நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் நேற்று தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து 'G Squad' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இதுகுறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 'உறியடி' படத்தை இயக்கி நடித்த விஜய் குமார் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
மேலும் அறிமுக இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கும் இந்த படத்திற்கு 'FIGHT CLUB' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிரேமம், கார்கி, உறியடி 2 உள்ளிட்ட முக்கிய படங்களுக்கு இசையமைந்த கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் 'FIGHT CLUB' திரைப்படம் வெளியாகும். தற்போது இதன் அறிமுக போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.