பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நானா படேகர் (Nana Patekar). மராத்தி, இந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், 2018-ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'காலா' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தொடர்ந்து தற்போது வரை மராத்தி, இந்தி படங்களில் நடித்து வரும் இவர், பத்ம ஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.
இந்த சூழலில் தற்போது அனில் ஷர்மா இயக்கத்தில் 'Journey' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனராஸ் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஷூட்டிங்கின்போது, ரசிகர் ஒருவர் நானா படேகருடன் செல்ஃபி எடுக்க வந்துள்ளார்.
அப்போது கோபப்பட்ட அவர், உடனே அந்த இளைஞரின் தலையில் சட்டென்று அடித்து அங்கிருந்து துரத்தி விட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. மேலும் இணையத்தில் அவருக்கு எதிராக அதிக கருத்துகளும் வெளியாகி வருகிறது. இந்த சூழலில் அது ஒரு ஷூட்டிங் என்று அப்படத்தின் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து 'Journey' படத்தின் இயக்குநர் அனில் ஷர்மா பேசியதாவது, “இப்போது தான் ஊடகத்தில் நானா, ஒரு நபரை அடிப்பது போல் வீடியோவை பார்த்தேன். ஆனால் அந்த வீடியோவானது ஷூட்டிங்கின் ஒரு பகுதியாகும். பனாரஸில் நடைபெற்ற ஷூட்டிங்கை அங்கிருக்கும் மக்கள் பலரும் கண்டு களித்தனர். அப்போது யாரோ ஒருவர் இதனை மட்டும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.
நானா படேகர் யாரையும் அடிக்கவில்லை. அது எங்கள் படத்தின் ஒரு காட்சி. இந்த வீடியோ மூலம் அவர் மிகவும் கொடூரக்காரர்போல் எதிர்மறையான பிம்பம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த வீடியோவின் உண்மையை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். நானா படேகர் ஒரு இளைஞரை தாக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.