கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், பாடகர் என தமிழ் சினிமாவின் உச்சத்தைத் தொட்டவர் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா. இவரது மகன் ரகு. இவரும் தந்தை வழியைப் பின்பற்றி சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். இதையடுத்து ரகு என்ற பெயர் மறைந்து ஜூனியர் பாலையா என்ற பெயரே இவரது அடையாளமாக மாறியது.
1975ம் ஆண்டு வெளியான 'மேல்நாட்டு மருமகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு 'கரகாட்டக்காரன்', 'சின்னத்தாயி', 'சங்கமம்', 'வின்னர்', 'சாட்டை', 'நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தந்தையைப் பேன்ற சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பாராட்டைப் பெற்றவர்.
அதேபோல் சினிமா தவிர்த்துச் 'சித்தி', 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் ஜூனியர் பாலையா நடித்துள்ளார். இவர் கடைசியாக 2021ம் ஆண்டு வெளிவந்த 'என்னங்க சார் உங்க சட்டம்' என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த ஜூனியர் பாலையாவிற்கு இன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மறைந்த ஜூனியர் பாலையாவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.