லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்தான் லியோ. திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், கெளதம் மேனன், சஞ்சய் தத், டான்சர் சாண்டி என திரைபட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும் இரண்டாம் கட்ட படபிடிப்பு சென்னையிலும் நடைபெற்று நிறைவடைந்தது.
சுமார் 125 நாட்களில் இதன் படப்பிடிப்பை லோகேஷ் முடித்ததாக ரசிகர்கள் பாராட்டினர். அனிருத் இசையமையக்கும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எகிறி இருக்கிறது. லோகேஷுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைந்த விஜய், இந்த முறை இந்த படத்தின் மூலம் LCU-வில் இணைகிறார்.
இந்த படம் இந்த மாதம் 19-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் தற்போது லியோ படத்தின் முதல் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் குஷியில் உள்ளனர் .
இந்தாண்டு ஜனவரியில் வெளியான விஜயின் 'வாரிசு' படத்துக்கும், அஜித்தின் 'துணிவு' படத்துக்கும் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த செய்தி அவர்களுக்கு ஒரு நற்செய்தியாக உள்ளது. லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் அப்படக்குழு கோரிக்கை வைத்திருந்தது.
இதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு ஒரேயொரு சிறப்புக் காட்சிக்கு மட்டும் அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை (6 நாட்கள்), நாள் ஒன்றுக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் ஒரே ஒரு சிறப்பு காட்சி மட்டும் இருக்க வேண்டும் என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி தொடங்க வேண்டும் என்றும், இரவு 1.30 மணிக்கு படத்தின் இறுதி காட்சி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் அசம்பாவிதமோ, கலவரமோ நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.