ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் 'இறைவன்'. இந்த படத்தை 'வாமனன்', 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்' படங்களை இயக்கிய ஐ.அகமது இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஜெயம்ரவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்ட நிலையில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் ஹெச் வினோத் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய ஜெயம்ரவி, இந்த படத்தை குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "பொதுவாக நான் கதையை தேர்ந்தெடுக்கும் போது அனைத்து ரசிகர்களும் பார்க்கும்படியான படமாக இருக்கவேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால் 'இறைவன்' படம் அப்படி அல்ல.
இந்த படத்தை குழந்தைகளுடன் யாரும் பார்க்கவேண்டாம். 'இறைவன்' படத்திற்கு பிறகு நான் நடித்து வரும் படங்கள் கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்கலாம். ஆனால் இறைவன் படத்தை ரசிகர்கள் குழந்தைகளுடன் பார்க்க திரையரங்கிற்கு வரவேண்டாம். " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "முன்னதாக பேசிய விஜய் சேதுபதி 'மோகன் ராஜா சார் அலுவலகத்திலும், எம்.குமரன் படத்திலும் ஜெயம் ரவியைப் பார்த்திருக்கிறேன்.நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான்' என்று சொன்னார். ஆனால் நான் இயக்க நினைக்கும் முத்த ஹீரோ விஜய் சேதுபதிதான். உங்களை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
ஏனென்றால் விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர். அதற்கு தேவையான எல்லாமே அவரிடம் உள்ளது. நான் இயக்கி அவர் நடித்தால், நல்லா நடித்து எல்லா வேலையும் அவரே செய்துவிடுவார். எனவே நான் நல்லா இயக்கியிருக்கிறேன் என்று எனக்கு பெயர் கிடைத்துவிடும்." என்று கலகலப்பாக பேசினார்.