நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது.
இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.
அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டு விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமான நிலவில் தரையிறக்கப்பட்டது. இதனை இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆரவாரத்தோடு கொண்டாடினர்.
இது இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் பெருமை, வெற்றி என நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்வை மக்கள் பெரும் ஆர்வமாக கண்டு கழித்தனர். அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை இஸ்ரோவுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சேஹர் ஷின்வாரி (Sehar Shinwari) என்பவர் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது அங்கிருக்கும் அரசுக்கு எதிராக சர்ச்சை கருத்தை பதிவிட்டு வருவார். இந்த சூழலில் சந்திரயான் 3 வெற்றியை குறிப்பிட்டு பாகிஸ்தானை விமர்சித்து மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள X வலைதள பதிவில், "இந்தியாவுடனான பகையை தவிர, 'சந்திரயான் 3' மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் வரலாறு படைத்த இஸ்ரோவை நான் உண்மையிலேயே வாழ்த்துகிறேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இடைவெளி அனைத்து அம்சங்களிலும் எவ்வளவு அளவிற்கு விரிவடைந்துள்ளது என்பதை காணலாம்.
இந்த சாதனையை செய்ய பாகிஸ்தானுக்கு இன்னும் இரண்டு - மூன்று தசாப்தங்கள் ஆகும். துரதிர்ஷ்டவசமாக, இன்று நம் துயரத்திற்கு நாம் தான் காரணமே தவிர வேறு யாரும் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இஸ்ரோவுக்கு இவர் பாராட்டுகள் தெரிவித்துள்ளதை பலரும் பாராட்டினாலும், சிலர் இவரை விமர்சித்து வருகின்றனர்.
இது போல் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், டி - 20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியினர் யாரேனும் இந்தியாவை தோற்கடித்தால் அவர்க்ளை திருமணம் செய்துகொள்வதாக கடந்த ஆண்டு இறுதியில் பதிவிட்டிருந்தார். ஆனால் அப்போது நடந்த இந்தியா -ஜிம்பாப்வே போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதனால் இவரை இந்திய ரசிகர்கள் கிண்டலடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது