விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் விரைவில் வரவுள்ள படம் தான் 'குஷி'. காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் ஷிவா நிர்வணா இயக்கியுள்ளார். இந்த படம் செப்டெம்பர் 1-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில் இதன் புரோமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இதன் ப்ரமோசனுக்காக நடிகர் விஜய் தேவரகொண்டா கோவைக்கு வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், படத்தை பற்றியும், தமிழ் சினிமா பற்றியும் பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய அவர், "தமிழில் விஜய் சார் நடித்த 'குஷி' படம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான குஷி மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது.
இந்த 2 படங்களின் பெயர்கள் தான் ஒன்றே தவிர, இந்த படத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. இரண்டும் வேறு வேறு கதை. விஜய் சாரின் குஷியைப் போல, விஜய் தேவரகொண்டாவின் குஷி படமும் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். சமந்தா ஒரு சிறந்த நடிகை. நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும்போதே சமந்தாவின் 'நீ தானே என் பொன்வசந்தம்' உள்ளிட்ட படங்களை பார்த்துள்ளேன். நான் சமந்தாவின் ரசிகன். அவருடன் இணைந்து நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி.
தமிழிலும், தெலுங்கில் நல்ல இயக்குநர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒருவரை நான் கடத்தி செல்வேன் என்றால், அது அனிருத். நாங்கள் இதுவரை ஒன்றாக பணியாற்றியது இல்லை. இருப்பினும் அவரது அவரது படைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படம் நல்லா இருந்துச்சு. லோகேஷ், நெல்சன் ஆகியோர் சிறந்த இயக்குநர்கள். இயக்குநர் வெற்றிமாறன் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன்." என்றார்.
தொடர்ந்து அவரது தோல்வி படங்கள் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "ரஜினி சாருக்கும் தொடர்ந்து 6 படங்கள் தோல்வி அடைந்துள்ளது. தற்போது 'ஜெயிலர்' ரூ.500 கோடி வசூலித்து நம்பர் 1 இடத்தில் உள்ளது. சிரஞ்சீவி சாருக்கும் 4, 5 படங்கள் தொடர் தோல்வியாக இருந்தது. கடந்த சங்கராந்தி (பொங்கல்) போது, வெளியான அவரது படம் பெரிய ஹிட் கொடுத்தது. கமல் சாருக்கும் விக்ரம் படம் பெரிய பெயரை கொடுத்தது.
முன்னணி நடிகர்களுக்கு இதே போல் படங்கள் சில நேரங்களில் தோல்வி, சில நேரங்களில் ஹிட் கொடுக்கலாம். இது சாதாரணமான ஒன்று தான்" என்றார். விஜய் தேவரகொண்டா ரஜினியை குறிப்பிட்டு சாதாரணமாக பேசியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.