பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் ராதிகா ஆப்தே. இந்தியில் அறிமுகமான இவர், பெங்காலி, மராத்தி, தெலுங்குவை தொடர்ந்து தமிழிலும் நடித்துள்ளார். 2021-ல் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான 'தோனி' என்ற படத்தில் அறிமுகமான இவர், 2013-ல் கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்திலும் நடித்துள்ளார்.
அதன்பின்னர், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2016-ல் வெளியான 'கபாலி' படத்தில் நடித்தது மூலம் மேலும் பிரபலமானார். அதன்பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியில் மட்டுமே நடித்து வருகிறார். இருப்பினும் அனைத்து மொழி படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தால் அதில் தொடர்ந்து நடித்து வரும் இவருக்கு 2021-ல் திருமணமானது.
திருமணம் முடிந்தும் தொடர்ந்து திரைத்துறையில் இருந்து வரும் இவர், தற்போது கைவசம் படங்களை வரிசையாக வைத்திருக்கிறார். அண்மையில் இந்தியில் வெளியான 'விக்ரம் வேதா' படத்திலும் இவர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது System Midnight என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் இவரது நடிப்பில் அண்மையில் 'Made in Heaven' என்ற சீரிஸின் 2-வது பாகம் Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியானது.
இதில் சோபிதா, அர்ஜுன் மாத்தூர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மொத்தம் 7 எபிசோடுகள் உள்ள இந்த தொடரில் 5-வது எபிசோடான 'The heart that skipped a bit' என்பதில் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இதில் அவர் ஒரு தலித் சமுதாய மணப்பெண்ணாக பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரின் தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரகாஷ் அம்பேத்கர், "பல்லவி என்ற தலித் பெண் கதாபாத்திரத்தின் வலியுறுத்தல், மறுப்பு மற்றும் எதிர்ப்பை நான் முற்றிலும் விரும்பினேன். எபிசோடைப் பார்த்த வஞ்சித் மற்றும் பகுஜன்கள் - உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்; அப்போதுதான் நீங்கள் அரசியல் முக்கியத்துவம் பெறுவீர்கள். பல்லவி கூறியவாறு இங்கு 'எல்லாமே அரசியல்'. ஜெய் பீம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராதிகா ஆப்தேவுக்கு அம்பேத்கரின் பேரன் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.