கேரளாவை சேர்ந்தவர் கல்யாணி. 2001-ம் ஆண்டு வெளியான 'அள்ளித்தந்த வானம்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான இவர், அதன்பிறகு, ஜெயம், ரமணா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து சிறிது இடைவேளை விட்ட அவர், மீண்டும் நடிக்க தொடங்கினார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் மெயின் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில ஷோக்கள் மூலம் விஜே ஆக இருந்த இவர், பிரிவோம் சந்திப்போம் - 1, 2, ஆண்டாள் அழகர் ஆகியற்றின் மூலம் மேலும் பிரபலமானார். தொடர்ந்து நடித்து வந்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
தற்போது நடிப்பில் இருந்து மொத்தமாக விலகியிருக்கும் இவர், தற்போது கடின பட்டு நடப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆபரேஷன் நடைபெற்றுள்ளதாகவும், இந்த முறை குணமாக நீண்ட நாள் தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக இருக்கிறேன். எனது உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. 2016ம் ஆண்டு எனக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடந்தது. சிறிது காலம் நலமாக இருந்தேன், அதன் பிறகு தான் எனக்கு நவ்யா பிறந்தாள்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு என் முதுகுத் தண்டுவட நிபுணரிடம் ஆலோசனை செய்தேன். அப்போது அவர், இதற்கு முன் நடந்த அறுவை சிகிச்சையில் குணமாகவில்லை, இதனால், இந்த முறை ஸ்க்ரூவை அகற்றிவிட்டு இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.
ஸ்க்ரூக்களை அகற்றி வேறொருவரோட எலும்பை பயன்படுத்தவேண்டும் என்று கூறினர். இந்த முறை குணமடைய வெகு நாட்கள் ஆகும். என் கணவர் ரோகித் என் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். எல்லாவற்றிர்கும் மேலாக எனது 5 வயது மகள் நவ்யா என் மீது அதீத அக்கறை கொள்கிறார். அவள் என் மீது காட்டும் பரிவையும் பரிவையும் என்னால் நம்ப முடியவில்லை.
எனக்கு முன்னால் ஒரு நீண்ட பாதை உள்ளது, ஆனால் நான் அங்கு இருப்பதற்காக நான் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கு நம்பிக்கையுடனும் நன்றியுடனும் இருக்கிறேன். நான் என் உடலை இனி ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன்." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.