எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் தான் 'நேர்கொண்ட பார்வை'. கடந்த 2019-ல் வெளியான இந்த படம், அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் 2016-ல் இந்தியில் வெளியான 'பிங்க்' திரைப்படத்தின் ரீ மேக் ஆகும். இந்தியில் பெரிய பிளாக் பாஸ்டர் கொடுத்த இந்த படம் தமிழில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.
இருப்பினும் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் இடம்பெற்ற சில முக்கிய வசனங்கள் சமூக ரீதியாக வரவேற்பை பெற்றது. குறிப்பாக "No Means No..". ஒரு பொண்ணு நோ னு சொன்னா, அது யாரா இருந்தாலும் உரிமை இல்லை என்ற அர்த்தத்தில் இடம்பெற்றிருந்த வசனங்கள் பெண்கள் மத்தியிலும், பெண்ணியவாதம் பேசுபவர்கள் மத்தியிலும், முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
இருப்பினும் அஜித் ரசிகர்களில் சிலர் இந்த படத்தை பெரிதாக வரவேற்கவில்லை. இருப்பினும் வசூல் ரீதியாக வழக்கம்போல் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வசனங்கள் இன்றும் மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல Youtube விமர்சகர் ஒருவர் இந்த படம் தான் அஜித் எடுத்த தவறான முடிவு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. ஒரு குடும்ப பிளாக்பஸ்டர் படமான விஸ்வாசத்திற்கு பிறகு ரீமேக் மற்றும் A செண்டர் திரைப்படமான நேர்கொண்ட பார்வையில் அஜித் நடித்ததுதான் அவரது சினிமா வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு .
இதனால் அவரின் ஃபேமிலி ஆடியன்ஸின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. குறிப்பாக, 'நேர்கொண்ட பார்வை' படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட கமர்ஷியல் காட்சிகள் சுத்தமாக செட் ஆகவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இவரது பதிவுக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது நடிகை காயத்ரி பதிலடி கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகை காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், ""ஒரு திரைப்படத்திற்கான வெற்றியின் அளவுகோல் என்பது வசூலைத் தாண்டி, அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பொருத்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இந்த சமூகத்தில் பல ஆண்டுகளாக, பல சகாப்தங்களாக விவாதிக்க வேண்டிய விஷயத்தை `நேர்கொண்ட பார்வை' படம் மூலம் நடிகர் அஜித்குமார் தொடங்கி வைத்திருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.